Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஸ்பெஷல் ரிப்போர்ட் : ரஜினிகாந்த் - டாப் 20 திரைப்படங்கள்....

12 டிச, 2014 - 10:28 IST
எழுத்தின் அளவு:

ரஜினிகாந்த், இந்தியத் திரையுலகில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழ் ரசிகர்களால் ஆராதிக்கப்படும் ஒரு நடிகர். சின்னஞ் சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அவர் எப்படி ரசிகராக்கிக் கொள்கிறார் என்ற மாயம் இன்று வரை யாருக்கும் புரியவில்லை.


சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்குத் தானாக வந்து விடவில்லை. அந்தப் பட்டத்திற்குரிய தகுதியான நடிகர் அவர். ஒரு நல்ல நடிகர்தான் நல்ல ஸ்டார் ஆக முடியும் என்று சொல்வார்கள். ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர் என்பதை அவர் அறிமுகமான காலத்திலேயே நிரூபித்து விட்டார்.


வெற்றியும், வசூலும் அவரை நோக்கிச் செல்லச் செல்ல அவரைக் கமர்ஷியல் பக்கம் திரும்ப வைத்து விட்டார்கள் அவரை வைத்து வசூலை அள்ளுபவர்கள். அவரும் அந்தப் பக்கம் அப்படியே மாறிவிட்டாலும், தொடர்ந்து குடும்பத்துடன் பார்க்கும்படியான படத்தைக் கொடுத்து வருகிறார். ஆனாலும் அவருடைய திறமை என்ன என்பதை உண்மையாகப் புரிந்து கொண்ட திரைப்பட ஆர்வலர்களும், விமர்சகர்களும் அவரிடமிருந்து அவருடைய ஆரம்பக் காலப் படங்களைப் போல வித்தியாசமான படைப்புகளை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.


அதற்கு உதாரணமாக எத்தனையோ படங்களைச் சொல்லலாம். “மூன்று முடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி, காயத்ரி, பைரவி, இளமை ஊஞ்சலாடுகிறது, தப்புத் தாளங்கள், அவள் அப்படித்தான், தர்ம யுத்தம்” என அவரது ஆரம்பக் காலப் படங்களில் ரஜினியின் நடிப்பை சரியாக வெளிக் கொண்டு வந்த பல படங்கள் இருந்திருக்கின்றன.


இன்றைய அவருடைய பிறந்த நாளில் அவர் நடித்த சிறந்த 20 திரைப்படங்களைப் பட்டியலிட்டுள்ளோம். ஆகஸ்ட் 18, 1975ம் ஆண்டு வெளிவந்த அவருடைய முதல் படமான 'அபூர்வ ராகங்கள்' படத்திலிருந்து இன்று டிசம்பர் 12, 2014 வரை அவர் நடித்து வெளிவந்துள்ள 158வது படமான 'லிங்கா' வரை எத்தனையோ சிறந்த படங்கள் இருந்தாலும் பல்வேறு விதங்களில் அந்தப் படங்களை கவனத்தில் கொண்டு இந்த சிறந்த 'டாப் 20 படங்களைப்' பற்றி சுருக்கமாக விவரித்துள்ளோம்.


1. முள்ளும் மலரும்


இயக்கம் - மகேந்திரன்


இசை - இளையராஜா


நடிப்பு - ரஜினிகாந்த், சரத்பாபு, ஷோபா, படாபட் ஜெயலட்சமி மற்றும் பலர்


வெளியான தேதி - ஆகஸ்ட் 15, 1978


'பாச மலர்' படத்திற்குப் பிறகு அண்ணன், தங்கை பாசத்தால் ரசிகர்களை நெகிழ வைத்த திரைப்படம் மகேந்திரன் இயக்கிய 'முள்ளும் மலரும்'. உமா சந்திரன் எழுதிய நாவல்தான் படமாக உருவாக்கப்பட்டது. 'வின்ச்' ஆபரேட்டராக வேலை பார்க்கும் ரஜினிகாந்த் தங்கை ஷோபா மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளவர். ரஜினிகாந்துக்கு அதிகாரியாக வரும் சரத்பாபுக்கும், ரஜினிக்கும் இடையே சண்டை வர ரஜினியை வேலையை விட்டு நீக்கி விடுகிறார் சரத்பாபு. அதன் பின் ஒரு விபத்தில் கையை வேறு இழக்கிறார் ரஜினி. இதனிடையே ஷோபாபுக்கும், சரத்பாபுவுக்கும் காதல் மலர அந்தக் காதலுக்கு ரஜிகாந்த் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அண்ணனை எதிர்த்துக் காதலனை கரம் பிடிக்க நினைக்கிறார் ஷோபா. இதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.


'கெட்ட பையன் சார் இந்த காளி...' என்று ரஜினிகாந்த் பேசி நடிக்கும் வசனம் இன்றளவும் மறக்க முடியாத ஒன்று. மிகவும் எளிமையாக, பாசமான அண்ணனாக ரஜினிகாந்த் நடித்த இந்தப் படம் அவருக்கு எண்ணற்ற பெண்களை ரசிகைகளாகப் பெற்றுத் தந்தது. பலரும் அவரை அண்ணனாகவே பார்த்தார்கள். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அண்ணன் - தங்கை பாசக் கதைகள் என்று சொன்னால் இந்தப் படத்தைப் பற்றிக் கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும்.


2. ஆறிலிருந்து அறுபது வரை


இயக்கம் - எஸ்.பி. முத்துராமன்


இசை - இளையராஜா


நடிப்பு - ரஜினிகாந்த், சங்கீதா, படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலர்.


வெளியான தேதி - செப்டம்பர் 14, 1979


இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும், ரஜினிகாந்தும் இணைந்து அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்களா என்பது இன்னும் பல ரஜினி ரசிகர்களுக்குக் கூடத் தெரிந்திருக்காது. அந்த அளவிற்கு ரஜினிகாந்தையும், அவரது நடிப்புத் திறமையையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட படம் இது. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ரஜினிகாந்த், கஷ்டப்பட்டு, தனது தம்பிகள், தங்கை என அனைவருக்கும் நல்ல படிப்பைக் கொடுத்து, வாழ்க்கையைக் கொடுத்து யாருமே நன்றி நினைக்காமல் அவரை தவிக்க விடுவதுதான் படத்தின் கதை. பாசத்தை விட பணம்தான் பெரியது என்று கூடப் பிறந்தவர்கள் நினைக்கும் போது அவர்களை வளர்த்து ஆளாக்கிய அண்ணன் எப்படிப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும். ஒரு மனிதனின் வாழ்க்கையை அப்படியே அச்சு அசலாக யதார்த்தமாக வெளிப்படுத்திய படம்.


இளைஞனாக, நடுத்தர வயதினனாக, வயதானவராக, அண்ணனாக, கணவனாக, அப்பாவாக என பல விதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம். ரஜினிக்குள் இப்படிப்பட்ட குணச்சித்திர நடிப்பையும் கொடுக்கக் கூடிய திறமை ஒளிந்திருக்கிறதா என அனைத்து ரசிகர்களுக்கு ம் புரிய வைத்த படம்.


3. பில்லா


இயக்கம் - ஆர். கிருஷ்ணமூர்த்தி


இசை - எம்.எஸ். விஸ்வநாதன்


நடிப்பு - ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, கே.பாலாஜி மற்றும் பலர்


வெளியான தேதி - ஜனவரி 26, 1980


ரஜினிக்கு ஒரு மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தைக் கொடுத்த படம். இதற்கு முன் வெளிவந்த சில படங்களில் அவர் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் ரஜினியின் ஸ்டைலான நடிப்பும், வசனம் பேசிய லாவகமும் இன்றைய தலைமுறை நடிகர்கள் அந்தப் படத்தை ரீமேக் செய்து நடித்தால் கூட ஒரிஜினல் பில்லா போல வரவே வராது என்பதுதான் உண்மை.


கடத்தல்காரனான காவல் துறை கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் பில்லாவை காவல் துறையினர் சுட்டுக் கொன்று விடுகிறார்கள். இருந்தாலும், அருக்குப் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டுபிடிக்க பில்லா இறந்ததை மறைத்து பில்லா போன்ற தோற்ற ஒற்றுமை உள்ள கழைக் கூத்தாடி ஒருவருக்குப் பயிற்சி கொடுத்து பில்லா மாதிரி நடிக்க வைத்து மற்றவர்களையும் எப்படி கைது செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.


பில்லா என்ற கடத்தல்காரனாக அசத்தலான ஆக்ஷனுடன் ஒரு கதாபாத்திரத்திலும், கொஞ்ச நேரமே வந்தாலும் பெண்மை கலந்த ராஜப்பா என்ற கழைக் கூத்தாடி கதாபாத்திரத்திலும் ரஜினியின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. இந்தப் படம்தான் ரஜினியை தமிழ்த் திரையுலகின் வசூல் நாயகன் ஆவதற்கு முதல் படியாக அமைந்தது.


4. ஜானி


இயக்கம் - மகேந்திரன்


இசை - இளையராஜா


நடிப்பு - ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, தீபா, சுருளிராஜன் மற்றும் பலர்


வெளியான தேதி - ஆகஸ்ட் 15, 1980


'முள்ளும் மலரும்' வெற்றிக்குப் பின் இயக்குனர் மகேந்திரன் - ரஜினிகாந்த் மீண்டும் இணைந்த படம் இது. மிக மிக வித்தியாசமான திரைக்கதை கொண்ட படம். அந்தக் காலத்திலேயே இப்படியெல்லாம் கூட யோசித்து படம் எடுத்திருக்கிறார்களா என்று இன்றைய படைப்பாளிகளையும் இந்தப் படம் யோசிக்க வைக்கும். என்றென்றும் இனிமையான பாடல்களுடன் ரஜினியின் இரு வேட நடிப்பில் வித்தியாசமாக அமைந்த படம் இது.


திருட்டுகள் செய்து பிழைக்கும் ஒரு ரஜினிகாந்த், முடிதிருத்தும் அழகு நிலையம் நடத்தும் மற்றொரு ரஜினிகாந்த், முதல் ரஜினியின் காதலி ஸ்ரீதேவி, இரண்டாவது ரஜினியின் காதலி தீபா இவர்களுக்கிடையே நடக்கும், ஆடு புலி ஆட்டம், கண்ணா மூச்சி ஆட்டம்தான் படத்தின் கதை. தோற்ற ஒற்றுமையை வைத்து தன் மீதான கொலைப் பழியை இரண்டாம் ரஜினி, முதல் ரஜினி மீது சுமத்த நினைக்க அதிலிருந்து முதலாமவர் எப்படி விடுபடுகிறார் என்பதுதான் முடிச்சு மேல் முடிச்சாக அமைந்த திரைக்கதை.


ஒரு கதாபாத்திரத்தில் தொங்கும் மீசை, நடு வகிடு தலை, கண்ணாடி என வித்தியாசமான தோற்றம், மற்றொரு கதாபாத்திரத்தில் சாதாரணமான ஆனால் ஸ்டைலான தோற்றம் என இரண்டு கதாபாத்திரங்களிலும் ரஜினியின் 'ஜானி' நடிப்பு, ரசிகர் களை ஜாஸ்தியாகவே கவர்ந்தது.


5. தில்லு முல்லு


இயக்கம் - கே.பாலச்சந்தர்


இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்


நடிப்பு - ரஜினிகாந்த், மாதவி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர்.


வெளியான தேதி - மே 1, 1981


வில்லனாக நடித்து, ஆக்ஷன் ஹீரோவாகவும் நடித்த ரஜினியால் ஒரு நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்திய படம். தன்னால் எப்படிப்பட்ட கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்று ரஜினிகாந்த் நிரூபித்த படம். இன்றும் தொலைக்காட்சிகளில் இப்படம் ஒளிபரப்பாகும் போது இன்றைய தலைமுறை ரசிகர்களும் ரசித்துப் பார்க்கும் ஒரு படமாக இந்தப் படம் இருக்கிறது.


ஜாலியாக இருக்க நினைக்கும் ரஜினிகாந்த், சந்தர்ப்ப சூழ்நிலையால் அதற்கு நேர்மாறாக அமைதியான சுபாவம் கொண்டவராக, மிகவும் நல்லவராக தன்னை காட்டிக் கொண்டு தேங்காய் சீனிவாசனிடம் வேலைக்குச் சேர்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் ரஜினியின் சுயரூபம் தேங்காய் சீனிவாசனுக்குத் தெரியவர, ரஜினி மாட்டிக் கொள்கிறார். அது நானில்லை, என்னுடைய தம்பி என பொய் சொல்லி தப்பித்துக் கொள்கிறார். சொன்ன பொய்யில் மாட்டிக் கொண்டு மீசை இல்லாமல் தம்பி, மீசையுடன் அண்ணன் என இந்திரன், சந்திரனாக மாறி மாறி நடிக்கிறார். இந்த நாடகத்திற்கு என்ன முடிவு என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.


1980களில் ஒரு ஜாலியான இளைஞர் எப்படியிருப்பாரோ அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை அப்படியே கண்முன் நிறுத்தியிருந்தார் ரஜினி. அதற்கு அப்படியே நேர்மாறாக, அமைதியாகவும், அப்பாவித்தனமாகவும் மற்றொரு விதமான தோற்றத்திலும் நடித்து அவரா இவர், இவரா அவர் என வித்தியாசப்படுத்தி நடித்து, தன்னால் நகைச்சுவையிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தார்.


6. மூன்று முகம்


இயக்கம் - ஏ. ஜெகன்னாதன்


இசை - இளையராஜா


நடிப்பு - ரஜினிகாந்த், ராதிகா, ராஜலட்சுமி, செந்தாமரை மற்றும் பலர்.


வெளியான தேதி - அக்டோபர் 1, 1983


போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என்றாலே சிவாஜிகணேசன் நடித்த 'தங்கப் பதக்கம்தான்' அந்தக் காலத்தில் ரசிகர்களுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால், அதன் பின் கொஞ்ச நேரமே நடித்தாலும் அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை இன்று வரை பேச வைத்துவிட்டார் ரஜினிகாந்த்.


நேர்மையான காவல் துறை அதிகாரியான ரஜினிகாந்தை வில்லன் செந்தாமரை கொன்று விட அவருக்குப் பிறக்கும் இரட்டையர்களான இரண்டு ரஜினிகாந்த் அப்பாவைக் கொன்றவரைப் பழிவாங்குவதுதான் படத்தின் கதை.


அலெக்ஸ் பாண்டியன், ஜான், அருண் என மூன்று கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் முத்திரை பதித்த படம். மூன்றிலும் அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரம் இன்றளவும் ரஜினிகாந்தின் ஸ்டைலான நடிப்புக்கு ஒரு உதாரணமாக விளங்குகிறது. இரண்டு வேடங்களில் நடிப்பதே கடினம் என்ற சூழ்நிலையில் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் ரஜினி நடித்த இந்தப் படம் அப்போது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது.


7. தம்பிக்கு எந்த ஊரு


இயக்கம் - ராஜசேகர்


இசை - இளையராஜா


நடிப்பு - ரஜினிகாந்த், மாதவி, சுலக்ஷணா, செந்தாமரை மற்றும் பலர்


வெளியான தேதி - ஏப்ரல் 20, 1984


ரஜினிகாந்த் 80களின் துவக்கத்தில் அதிகமான ஆக்ஷன் படங்களில்தான் நடித்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்குள் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். அதில் பல படங்கள் ஆக்ஷன் படங்கள்தான். அவரை மீண்டும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்திற்கு அழைத்து வந்த படம் 'தம்பிக்கு எந்த ஊரு'. முழுவதும் கிராமத்திலேயே நடக்கும் கதை.


பணக்கார வாரிசான ரஜினிக்கு பணத்தின் அருமை என்னவென்பதை புரிய வைக்க அருடைய அப்பா ரஜினியை கிராமத்திற்கு நண்பன் வீட்டிற்கு அனுப்புகிறார். போன இடத்தில் பணக்காரப் பெண்ணான ரஜினிக்கும், மாதவிக்கும் மோதல் வந்து காதல் வருகிறது. ரஜினியை ஒரு தலையாகக் காதலிக்கும் சுலக்ஷணா. பின்னர் ரஜினி, மாதவி காதலால் வரும் பிரச்சனை, சில குழப்பங்கள் என சுபமாக முடியும் கதை.


இந்தப் படத்தில் கிராமத்திலேயே ரஜினி அதிகம் இருக்கும்படியான கதாபாத்திரமாக இருந்தாலும், அதிலும் நகைச்சுவையில் தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவருக்கும் மாதவிக்கும் இடையிலான மோதல் காட்சிகள் சுவாரசியமாக அமைந்த படம். ரஜினி குறைவான நகைச்சுவைப் படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அதில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது.


8. நல்லவனுக்கு நல்லவன்


இயக்கம் - எஸ்.பி.முத்துராமன்


இசை - இளையராஜா


நடிப்பு - ரஜினிகாந்த், ராதிகா, கார்த்திக், துளசி மற்றும் பலர்


வெளியான தேதி - அக்டோபர் 22, 1984


ஆக்ஷன், மாஸ், கலெக்ஷன் ஹீரோ ரஜினிகாந்தை மீண்டும் குடும்பப் பாங்கான கதைக்குத் திருப்பிய படம். கருப்பு வெள்ளை காலம் போல் 80களில் குடும்பக் கதைகள் வரவில்லையே என்று நினைத்தவர்களுக்கு இந்தப் படம் சரியான தீனி போட்டது. ரஜினிகாந்தும், ராதிகாவும் அன்பான கணவன் மனைவியாக நடித்து தாய்க்குலங்களை மிகவும் கவர்ந்தார்கள்.


அடிதடி, சண்டை என பொறுப்பில்லாமல் திரிந்து கொண்டிருந்த ரஜினிக்கும் ராதிகாவுக்கும் காதல் மலர்கிறது. ராதிகாவின் அன்பால் ரஜினி கொஞ்சம் கொஞ்சமாக மாறி வேலைக்குச் சென்று படிப்படியாக உயர்ந்து பெரும் தொழிலதிபராகிறார். அவர்களுடைய மகள் துளசிக்கும், கெட்ட குணம் கொண்ட கார்த்திக்கும் காதல் மலர, பெற்றோரை எதிர்த்து காதலனை கைபிடிக்கிறார் துளசி. இந்த வேதனையில் ராதிகா மரணமடைய தவித்துப் போகிறார் ரஜினி. ஒரு சந்தர்ப்பத்தில் கார்த்திக்கை அவருடைய நண்பர்களே கொல்ல முயற்சிக்க, அவரை ரஜினிகாந்த் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.


கொஞ்சம் 'ஆறிலிருந்து அறுபது வரை' படம் மாதிரியான மூன்று விதமான இளைஞன், நடுத்தர வயதின்ர், வயதானவர் என்ற கதாபாத்திரங்கள் ரஜினிக்கு. ஆனால் அந்தப் படம் போல எந்தச் சாயலும் இல்லாத வித்தியாசமான நடிப்பை இந்தப் படத்தில் வழங்கியிருந்தார். இந்தப் படம் மூலம் பல்வேறு தனியார் விருதுகள் ரஜினிக்குக் கிடைத்தது.


9. ஸ்ரீ ராகவேந்திரர்


இயக்கம் - எஸ்.பி.முத்துராமன்


இசை - இளையராஜா


நடிப்பு - ரஜினிகாந்த், லட்சுமி மற்றும் பலர்


வெளியான தேதி - ஜனவரி 1, 1985


ரஜினி மிகவும் ஆத்மார்த்தமாக நடித்த படம். தீவிர ராகவேந்திர பக்தரான ரஜினிகாந்த் அவருடைய 100வது படமாக இந்தப் படத்தில்தான் நடிக்க வேண்டுமென்று முடிவெடுத்தார். அப்போது ரஜினிகாந்த் எப்படி ராகவேந்திரராக நடிப்பார் என்று எழுந்த கேள்விகளுக்கெல்லாம் அவருடைய நடிப்பின் மூலம் சரியான பதிலைக் கொடுத்தார்.


மகான் ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய இந்தப் படத்தில் ரஜினியின் நடிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. ராகவேந்திரரின் இளவயது முதல் முதிர்ந்த பருவம் வரை ரஜினிகாந்த் மிகவும் மெனக் கெட்டு நடித்திருந்தது அவருடைய ரசிகர்களைக் கூடக் கவர்ந்தது. ஒரு நடிகன் என்பவன் எப்படிப்பட்ட கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதை இந்தப் படத்தின் மூலம் ரஜினியும் அழுத்தமாகப் பதிய வைத்தார். அவர் நடித்துள்ள படங்களில் இந்தப் படமும் அவருக்கு மனநிறைவைத் தந்த படமாக அமைந்தது. அந்தக் காலக் கட்டத்தில் மற்ற ரஜினி படங்களைப் போல் வியாபார ரீதியாக மிகப்பெரிய வசூலைக் குவிக்கவில்லை என்றாலும் இந்தப் படம் ரஜினியின் முக்கிய படங்களின் பட்டியலில் கண்டிப்பாக இடம் பெறும் பெருமை படைத்த ஒன்று.


10. தளபதி


இயக்கம் - மணிரத்னம்


இசை - இளையராஜா


நடிப்பு - ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த்சாமி, கீதா, ஷோபனா, பானுப்ரியா மற்றும் பலர்


வெளியான தேதி - நவம்பர் 5, 1991


இயக்குனர் மணிரத்னம் - ரஜினிகாந்த் முதன் முறையாகக் கூட்டணி சேர்ந்த படம். ரஜினிகாந்த் என்றால் மாஸ் ஹீரோதான் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ரஜினிகாந்தை வழக்கமான மாஸ் ஹீரோவாகக் காட்டாமல் மிகவும் வித்தியாசமான ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மணிரத்னம் காட்டி அவருடைய ரசிகர்களின் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றார்.


அம்மா தவறான வழியில் பெற்றுக் கொண்டதால் அனாதையாக தவித்த ரஜினி வளர்ந்து ஆளாகி பிரபல தாதாவான மம்முட்டியின் நட்பைப் பெறுகிறார். நண்பனுக்காக உயிரையும் கொடுக்கும் அளவிற்கு நட்பாகப் பழகுகிறார் ரஜினிகாந்த். இதனிடையே மம்முட்டியையும், ரஜினிகாந்தையும் கைது செய்து சட்டத்தின் முன் நிற்க வைக்க கலெக்டரான ரஜினிகாந்தின் தம்பியான அரவிந்த்சாமி முயற்சிக்கிறார். ரஜினி தன் மகன்தான் என்ற உண்மை அரவிந்தசாமியின் அம்மாவான ஸ்ரீவித்யாவுக்குத் தெரிய வருகிறது. அதன் பின் நடக்கும் பாசப் போராட்டமும், நட்புப் போராட்டமும்தான் படத்தின் கதை.


ஒரு தீபாவளித் திருநாளில் வெளிவந்த இந்தப் படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு கிடைத்தது. மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரஜினியின் 'செட்டிலான' நடிப்பு படத்தில் மாறுபட்டு அமைந்தது. குறைவான வசனங்களுடன் வெறும் பார்வையாலேயே நடிப்பை வெளிப்படுத்திய ரஜினியின் சிறந்த ஆக்ஷன் படங்களில் தளபதி படத்திற்கு முக்கிய இடமுண்டு.


11. மன்னன்


இயக்கம் - பி.வாசு


இசை - இளையராஜா


நடிப்பு - ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பு, கவுண்டமணி, விசு, மனோரமா மற்றும் பலர்


வெளியான தேதி - ஜனவரி 15, 1992


ஒரு பரபரப்பான ஆக்ஷன் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம். ஆக்ஷன் மட்டுமல்ல, பாசமும், காதலும் உச்சத்தில் அமைந்த படம் இது. 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே....' என ரஜினி பாடி நடித்த பாடல் இன்றும் தாயை தெய்வமாக நினைக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல்.


சாதாரண தொழிலாளியாக இருக்கும் ரஜினிகாந்துக்கும், அந்த கம்பெனியின் முதலாளியான விஜயசாந்திக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. ஒரு சந்தர்ப்பத்தில் விஜயசாந்தியும், ரஜினிகாந்தும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பின்னரும் விஜயசாந்தியும் ரஜினிகாந்தும் சண்டை போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அது தொழிலாளிக்கும் முதலாளிக்குமான மோதலாகவே இருக்கிறது. கடைசியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.


ரஜினிகாந்த்தின் அசத்தலான ஸ்டைலான நடிப்பு இந்தப் படத்தில் புதிய பாதையில் அமைந்தது. இந்தப் படத்தில் அவருடைய தோற்றம், நடை, உடை, பாவனை என அனைத்திலுமே ஒரு ஸ்டைல் குடிகொண்டிருந்தது. அதிலும் விஜயசாந்தியுடனான ஒவ்வொரு காட்சியுமே தீ பறக்கும் அளவிற்கு இருந்தது. இப்படியும் ஒரு ஆக்ஷன் படம் அமையுமா என்று ஆச்சரியப்பட வைத்த இந்தப் படம் வெள்ளி விழா கொண்டாடியது.


12. அண்ணாமலை


இயக்கம் - சுரேஷ் கிருஷ்ணா


இசை - தேவா


நடிப்பு - ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு, ரேகா, ராதாரவி, மனோரமா மற்றும் பலர்


வெளியான தேதி - ஜுன் 26, 1992


ரஜினியின் படங்கள் வெறும் மசாலாப் படங்கள் என்று சிலர் அந்தக் காலத்தில் குறை சொல்வார்கள். ஆனால், அவருடைய ஒவ்வொரு படத்திலும் குடும்பம், பாசம், காதல் என அனைத்துமே சரிவிகிதமாக அமைந்து குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இருக்கும். ரஜினியின் அட்டகாசமான ஆக்ஷன் படங்களில் அண்ணாமலை படத்திற்கு முக்கிய இடமுண்டு.


மாடுகளை வைத்துப் பால் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த், பணக்கார நண்பன் சரத்பாபு குடும்பத்தாரால் ஏமாற்றப்படுகிறார். ஏமாற்றத்தைத் தாங்கிக் கொண்டு அவரும் உழைப்பால் உயர்ந்து நண்பனுக்கே சவால் விடும் அளவிற்கு மிகப் பெரும் பணக்காரராக உயர்கிறார். சரியான சந்தர்ப்பத்தில் நட்பு என்றால் என்ன என்பதை நண்பனுக்கு எப்படிப் புரிய வைக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.


ரஜினிகாந்த் எப்போதுமே அவருடைய தோற்றத்திற்கேற்றபடியான சரியான கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடிப்பார். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் ஒரு எளிமை இருக்கும். அது இந்தப் படத்தில் நிறையவே இருக்கும். பணக்காரனாக ஆன பின்னாலும் எளிமையாக இருப்பதும், நட்பை அதிகமாக மதிப்பதும் இந்தப் படத்திற்கு அப்படி ஒரு வெற்றியைத் தேடிக் கொடுத்த்து.


13. பாட்ஷா


இயக்கம் - சுரேஷ் கிருஷ்ணா


இசை - தேவா


நடிப்பு - ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், ஜனகராஜ், தேவன், ஆனந்தராஜ், சரண்ராஜ் மற்றும் பலர்


வெளியான தேதி - ஜனவரி 15, 1995


ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படங்களிலேயே எவர் க்ரீன் ஆக்ஷன் திரைப்படம் என்றால் அது பாட்ஷா மட்டுமே. மீண்டும் ஒரு முறை அது போன்ற மாயம் நடக்குமா என்பது சந்தேகமே. இந்தப் படத்திற்குப் பிறகு ரஜினி நடித்து எத்தனையோ படம் வெளிவந்தது என்றாலும் இன்று வரை 'பாட்ஷா' படத்திற்கு அருகில் கூட எந்தப் படமும் வரவில்லை என்பதுதான் உண்மை என்பதை ரஜினியின் அதி தீவிர ரசிகர்களே சொல்வார்கள்.


பம்பாயில் நண்பன் சரண்ராஜை அநியாயமாகப் பறி கொடுத்த ரஜினிகாந்த், சென்னையில் தனது தம்பி, தங்கைகள், அம்மாவுடன் ஆட்டோ டிரைவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கும் நக்மாவுக்கும் காதல் வருகிறது. அந்தக் காதலுக்கு நக்மாவின் அப்பா தேவன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனிடையே தங்கையைக் கிண்டல் செய்த்தால் உள்ளூர் தாதா ஆனந்தராஜை அடித்துத் துவைக்கிறார் ரஜினிகாந்த். அதன் பின்தான் ரஜினிகாந்த் பம்பாயையை கதி கலக்கிய தாதா பாட்ஷா என்ற உண்மை தெரிய வருகிறது. பாட்ஷா ரஜினி இறந்துவிட்டதாக நினைத்த வில்லன் ரகுவரன் ஜெயிலிலிருந்து வந்து ரஜினியைக் கொல்ல நினைக்கிறார். அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.


பாட்ஷா, மாணிக்கம் என இரு விதமான இரட்டை வேடமில்லாத கதாபாத்திரங்கள். இன்றும் சில காட்சிகளைப் பார்த்தால் புல்லரித்துப் போவது நிஜம். அதிலும் ஆனந்தராஜை கட்டி வைத்து உதைக்கும் காட்சிமுடிந்ததும், ரஜினியின் விஸ்வரூபத்தைப் பார்க்கும் போது நம்மையும் மறந்து கைதட்டத் தோன்றும். அந்த ஒரு காட்சி போதும் ரஜினியைப் பற்றி சொல்வதற்கு, ஒரு காட்சியைப் பற்றிச் சொன்னால் அது நூறு காட்சியைப் பற்றிச் சொல்வதற்குச் சமம்.


14. முத்து


இயக்கம் - கே.எஸ்.ரவிக்குமார்


இசை - ஏ.ஆர். ரகுமான்


நடிப்பு - ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு, ராதாரவி மற்றும் பலர்


வெளியான தேதி - அக்டோபர் 23, 1995


கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான் முதன் முறையாக இணைந்த படம். ஒரு கலகலப்பான நகைச்சுவையான கதையில் ஆக்ஷனையும், காதலையும், பாசத்தையும் கலந்து சொன்ன இந்தப் படம் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, ஜப்பான் நாட்டிலும் வெளியாகி கோடிக்கணக்கான ரூபாயை அள்ளியது.


ஜமீன்தார் பரம்பரையைச் சேர்ந்த சரத்பாபுவின் வீட்டில் கொஞ்ச அதிகமான அதிகாரத்துடன் உள்ள வேலையாளாக இருக்கிறார் ரஜினிகாந்த். சரத்பாபு, ரஜினிகாந்த் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். இது சரத்பாபுவின் மாமாவான ராதாரவிக்குப் பிடிக்கவில்லை. இதற்காக ரஜினியை சமயம் பார்த்து பழி வாங்கி வீட்டை விட்டே அனுப்புகிறார். அதன் பின்தான் ரஜினி யார் என்ற உண்மை தெரிய வருகிறது. இருந்தாலும் இப்போது இருப்பது போலவேதான் நான் எப்போதும் இருப்பேன் என்ற உயர்ந்த மனதுடன் ரஜினி நடந்த கொள்வதாக அமைந்த கதை.


ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு, சுபாஸ்ரீ, ராதாரவி, வடிவேலு என படத்தில் மிகப் பெரும் நட்சத்திரக் கூட்டம் இருந்தாலும் அனைவருக்கும் சரியான முக்கியத்துவத்தைக் கொடுத்த இந்தப் படம் வெள்ளி விழாக் கண்ட படம். வழக்கம் போல சாதாரண மனிதனாக, எளிமையானவனாக, பாசமானவனாக மக்களின் மனதில் ரஜினிகாந்த் இடம் பிடித்த படம்.


15. அருணாச்சலம்


இயக்கம் - சுந்தர் .சி


இசை - தேவா


நடிப்பு - ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, ரகுவரன் மற்றும் பலர்


வெளியான தேதி - ஏப்ரல் 10, 1997


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் தீவிர பக்தரான ரஜினிகாந்த் அந்தக் கடவுளின் பெயரால் நடித்த படம். ஃபேன்டஸியான ஒரு கதையில் கலகலப்பான படமாக இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சுந்தர் .சி. இவருக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை அப்போது பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆனால், ஒரு ஜனரஞ்சகமான குடும்பத்துடன் பார்க்கும்படியான ஒரு படத்தை கொடுத்தார் இயக்குனர் சுந்தர் .சி.


எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினிக்கு தான் ஒரு அனாதை என்பது தெரிய வருகிறது. அதோடு, அவமானப்படவும் நேருகிறது- அதன் பின் அந்த ஊரை விட்டு வந்து சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில்தான் அவர் ஒரு மிகப் பெரிய கோடீசுவரரின் வாரிசு என்பது தெரிய வருகிறது. ஆனால், ரஜினி அவருடைய அப்பாவின் சொத்துக்கு வாரிசாக வேண்டுமென்றால் ஒரு மாதத்திற்குள் 30 கோடி ரூபாயை செலவழிக்க வேண்டும் என்ற நிபந்தனை உயிலில் இருக்கிறது. அப்படியில்லை என்றால் அவருடைய அப்பாவின் ஆயிரக்கணக்கான சொத்துக்கள் அனாதை ஆசிரமத்திற்கு போய் விடும் என்ற நிலை. அந்த சவாலில் ரஜினி வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.


வழக்கம் போலவே இந்தப் படத்திலும் மிகவும் எளிமையான ஒரு ரஜினிகாந்தைப் பார்க்க முடிந்தது. கோடீசுவரரின் வாரிசான பின்னும் தன்னுடைய எந்தக் குணத்தையும் மாற்றிக் கொள்ளாத ஒரு கதாபாத்திரமும், கடைசியில் சொத்தை விட பாசம்தான் பெரியது என முடிவெடுக்கும் விதத்தில் அமைந்த கதாபாத்திர வடிவமைப்பும் ரஜினிகாந்த் இமேஜை இன்னும் உயர்த்துவதாக அமைந்தது. இப் படத்தின் மூலம் பலருக்கு லாபத்தில் பங்குகளைக் கொடுத்தார் ரஜினிகாந்த்.


16. படையப்பா


இயக்கம் - கே.எஸ்.ரவிக்குமார்


இசை - ஏ.ஆர். ரகுமான்


நடிப்பு - ரஜினிகாந்த், சிவாஜிகணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, மணிவண்ணன் மற்றும் பலர்


வெளியான தேதி - ஏப்ரல் 9, 1999


நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்தும், சிவாஜிகணேசனும் இணைந்து நடித்த படம். 'முத்து' படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்தும், கே.எஸ்.ரவிக்குமாரும் மீண்டும் இணைந்த படம். படையப்பா படம் ரஜினியின் முந்தைய பட சாதனைகள் பலவற்றை முறியடித்தது. தனக்கு நிகராக ரம்யா கிருஷ்ணனுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும் படையப்பாவில் ரஜினியின் நடிப்பு பட்டையைக் கிளப்பிய ஒன்று.


ஊரிலேயே மதிப்பான குடும்பத்தின் தலைவராக இருக்கும் சிவாஜிகணேசனின் மகன் ரஜினிகாந்த். ஆனால், ரஜினியின் சித்தப்பா மணிவண்ணன், அண்ணன் குடும்பத்தை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்துக் கொள்கிறார். அப்பா சிவாஜியும் மரணடைய சொத்துக்களை இழந்து நடுத் தெருவில் நிற்கும் ரஜினிகாந்த், அவருக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடித்து வாழ்க்கையில் உயர்ந்து எப்படி சாதிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. வில்லன்கள் எதிர்ப்பு என்று இல்லாமல் ரஜினிக்கு எதிராக ரம்யா கிருஷ்ணன் செயல்படுவதுதான் படத்தின் ஹைலைட்டாக அமைந்தது.


முதலில் இளமைத் துடிப்பான ரஜினிகாந்த் ஒரு பக்கம் அசத்த, பின்னர் வயதானாலும் அவருடைய ஸ்டைல் குறையாமல் அதிலும் ஒரு சிறப்பான 'லுக்கை' வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார் ரஜினிகாந்த். 'பாட்ஷா' படத்திற்குப் பிறகு ரஜினிக்கு 'படையப்பா' மற்றொரு பேர் சொல்லும் படமாக அமைந்தது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் பேசிய 'பஞ்ச் வசனங்கள் இன்றும் மிகவும் பாப்புலரானவை.


17. சந்திரமுகி


இயக்கம் - பி.வாசு


இசை - வித்யாசாகர்


நடிப்பு - ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு மற்றும் பலர்


வெயான தேதி - ஏப்ரல் 14, 2005


'பாபா' படத்தின் தோல்விக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து வெளிவந்த படம். படம் பார்த்த பலர் இது ரஜினி படம் போலவே இல்லை, ஜோதிகாவுக்கும், வடிவேலுவுக்கும்தான் அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்று சொன்னார்கள். ஆனால், ரஜினிகாந்த்தான் படத்தின் தூண் என்பதை அனைரும் மறந்து விட்டுப் பேசினார்கள். மலையாளத்தில் பல வருடங்களுக்கு முன் வந்த கதையை ரீமேக் செய்து வெளியிட்டு ரஜினிகாந்த் நடித்த படங்களிலேயே , அதிக நாட்கள் ஓடிய படமாக அமைந்தது.


ரஜினிகாந்த் ஒரு மனநல மருத்துவர். நண்பர் பிரபு வாங்கிய புது வீட்டிற்குச் செல்கிறார். அந்த வீட்டிற்குள் ஏதோ ஒரு சக்தி இருப்பதும் அதனால் சில தொந்தரவுகள் ஏற்படுவதையும் அறிந்து கொள்கிறார். அவை என்ன என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். போகப் போக பல மர்மமான விஷயங்களைத் தெரிந்து கொள்கிறார். பிரபுவின் மனைவியான ஜோதிகா ஒரு வித்தியாசமான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிகிறார். அதிலிருந்து அவரை எப்படி ரஜினி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.


ஒரு குடும்பக் கதையாக ஆரம்பமாகும் படம், நகைச்சுவைக் கதையாக மாறி, பின்னர் சஸ்பென்சாக நகர்ந்து பரபரப்பாக ரசிக்க வைத்தது. மிகப் பெரிய ஆக்ஷன் இல்லாமல், வழக்கமான ரஜினியைப் பார்க்க முடியாத படமாக இருந்தாலும் சந்திரமுகி படம் சாதனை படைத்தது.


18. சிவாஜி


இயக்கம் - ஷங்கர்


இசை - ஏ.ஆர். ரகுமான்


நடிப்பு - ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், விவேக் மற்றும் பலர்


வெளியான தேதி - ஜுன் 15, 2007


ஒரு நடிகரின் முழு திறமையையும் வெளிப்படுத்த மிகச் சிறந்த இயக்குனர் வேண்டும் என்பதை நிரூபீத்த ஒரு படம். அதுவரை பார்த்த ரஜினி படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ரஜினியை இந்தப் படத்தில் காட்டியிருந்தார் இயக்குனர் ஷங்கர். இவர்களின் முதல் கூட்டணியில் வந்த இந்தப் படம் அதற்கு முந்தைய பல வசூல் சாதனைகளை முறியடித்தது.


அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும் கோடீசுவரரான ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்று கல்லூரி ஒன்றைத் திறக்க ஆசைப்படுகிறார். ஆனால், கல்வியை வியாபாரமாக நடத்தி வரும் சுமனுக்கும் ரஜினிக்கும் பிரச்சனை வருகிறது. அவருடைய தொந்தரவுகளையும் மீறி ரஜினி கல்லூரியைக் கட்டி முடித்து மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறார். பல ஊர்களில் நல்ல திட்டங்களை செயல்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் ரஜினியைக் கொல்லவும் சுமன் முயற்சி செய்ய, அந்தத் திட்டத்தை முறியடித்து, ரஜினி வேறு ஒரு புது மனிதராக வந்து சுமனை எப்படி பழி தீர்க்கிறார் என்பதுதான் படத்தின் கதை.


சிவாஜி - தி பாஸ் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது. 90 சதவீதப் படத்தில் சிவாஜியாக வந்து அசத்தினாலும் கடைசியாக ஒரு 10 சதவீதப் படத்தில் எம்ஜிஆர்-ஆக இரண்டாவது கதாபாத்திரம் ஒன்றில் வந்து ரஜினி அசத்தியது அவரது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ரஜினி என்ற சூப்பர் ஸ்டாரை மேலும் ஒரு படி உயர்த்திக் காட்டியிருந்தார் இயக்குனர் ஷங்கர்.


19. எந்திரன்


இயக்கம் - ஷங்கர்


இசை - ஏ.ஆர். ரகுமான்


நடிப்பு - ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர்


வெளியான தேதி - அக்டோபர் 1, 2010


சிவாஜி படத்தின் மாபெரும் வெற்றி, மீண்டும் ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியை இணைய வைத்தது. இந்தியத் திரையுலகில் இருந்து இப்படி ஒரு படமா என உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த படம். தமிழ் சினிமாவில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம். அதே அளவிற்கு அதிகமான வசூலையும் அள்ளியது. இதுவரை வேறு எந்தப் படமும் இந்த வசூல் சாதனையை முறியடிக்கவில்லை.


ரோபோட்டிக்ஸ் சைன்டிஸ்ட்டான ரஜினிகாந்த் புதிய ரோபோ ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் வெற்றி காண்கிறார். ரஜினியின் இந்த வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத இன்னொரு சைன்டிஸ்ட் ரஜினிக்கு எதிராக செயல்படுகிறார். அதையும் மீறி, ரஜினிகாந்த், ரோபோவிற்கு உணர்வுகளையும் உருவாக்குகிறார். ஒரு கட்டத்தில் அந்த ரோபோ, ரஜினிகாந்தின் காதலியான ஐஸ்வர்யா ராய் மீதே காதல் கொள்கிறது. ரஜினியின் எதிரியின் சூழ்ச்சியில் அந்த ரோபோவிற்குக் கெட்ட குணங்கள் அதிகமாக, ஒரு கட்டத்தில் அந்த ரோபோ தன்னை உருவாக்கிய ரஜினியையே அழிக்கத் துடிக்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.


உயிருள்ள கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றால் எப்படியாவது நடித்து விடலாம். ஆனால், ஒரு மனிதனைப் போன்ற ரோபோ என்றால் எப்படி இருக்கும் என்று கூட உணர முடியாத சூழ்நிலையில், நம் கண் முன் உயிருள்ள ஒரு ரோபோவின் நடிப்பை அப்படியே கொண்டு வந்தார் ரஜினிகாந்த். சைன்டிஸ்ட் ரஜினியின் நடிப்பை விட ரோபோ ரஜினியின் நடிப்பு, அவருடைய பழைய அதிரடி ஸ்டைலுடன் அமைந்து படத்திற்கு அட்டகாசமான வெற்றியைக் கொடுத்தது.


20. லிங்கா


இயக்கம் - கே.எஸ். ரவிக்குமார்


இசை - ஏ.ஆர். ரகுமான்


நடிப்பு - ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர்.


இன்று வெளியாகியுள்ள படம்தானே எப்படி இந்த படமும் ரஜினியின் சிறந்த 20 திரைப்படங்களுள் இடம் பெறலாம் என்ற சந்தேகம் கண்டிப்பாக எழும். இந்தப் படம் அந்த அளவிற்கு ஒரு பெரிய வெற்றியைப் பெறும் என்பது நிச்சயம். அதே சமயம், ரஜினிகாந்த்தின் நடிப்பு படத்தில் மிகப் பெரிய அளவில் பேசப்படும். இதுவரை இந்த மாதிரியான ஒரு கதையில் நான் நடித்ததில்லை என்று ரஜினியே சொல்லுமளவிற்கு இந்தப் படம் அமைந்திருக்கிறதென்றால் இந்தப் படத்தின் வெற்றி எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.


ரஜினிகாந்த் - கே.எஸ்.ரவிக்குமார் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம். ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டு மீண்டு வந்து நடித்திருக்கும் படம் என்ற முக்கியத்துவம் இந்தப் படத்திற்கு உண்டு. படம் எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பதை ரஜினியின் ரசிகர்கள் மட்டுமல்ல திரைப்பட ரசிகர்கள் பலரும் இன்று அதிகாலையிலிருந்தே அவர்களது கருத்துக்கள் மூலம் நிரூபித்து வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in