Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தயாரிப்பாளராகும் இசையமைப்பாளர்கள்...! - ஸ்பெஷல் ரிப்போர்ட்

09 ஆக, 2014 - 15:09 IST
எழுத்தின் அளவு:

மெட்டுக்கு பாட்டு, பாட்டுக்கு மெட்டு என்ற காலம் போய் இப்போது துட்டுக்கு பாட்டு என்ற நிலை வந்துவிட்டது என்றே சொல்லலாம். எந்த தயாரிப்பாளர் பெரும் செலவில் பாடல் வரவேண்டும் என்று விரும்புகிறாரோ, அதற்கு தகுந்தாற்போல் இசையமைப்பாளர்கள் இப்போது உள்ளனர். பெரிய பட்ஜெட் படங்கள், நடுத்தர பட்ஜெட் படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள் இவற்றுக்கு என்று இசையமைப்பாளர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் இப்போது முடிவு செய்யும் நிலையில் தயாரிப்பாளர் உள்ளனர்.


திரைத்துறையை பொறுத்த வரையில் ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இயக்குநர்கள் நடிகர்கள் ஆவதும், ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர்கள் ஆவதும், நடிகர்கள் தயாரிப்பாளர்கள் ஆவதும், காமெடி நடிகர்கள் ஹீரோ ஆவதும் என சில மாற்றங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். அந்த வரிசையில் இப்போது அடுத்த கட்டத்துக்கு முன்னேற துடிப்பவர்கள் இசையமைப்பாளர்கள்.


இறக்கும் மனிதர்கள், இரவா பாடல்கள் என்று சொன்னது போல் காலகாலத்துக்கும் இந்த இசை அமைப்பாளர்களின் பாடல்கள் நம் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது. ஆனால் சமீபகாலமாக, இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்களாக மாறி வருகின்றனர். இப்படி ஒரு எண்ணம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்திலேயே தொடங்கியது. பின்னர் இளையராஜா தொடங்கி இப்போது ஜீ.வி.பிரகாஷ் வரை தொடர்கிறது. அப்படி இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்களான சிலரை இங்கு பார்ப்போம்...


எம்.எஸ்.விஸ்வநாதன்


1952-ல் பணம் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான எம்.எஸ்.விஸ்வநாதன், தன் 78 வயதிலும் 22 வயதாக உழைத்தார். இளையராஜா முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரையில் அனைவருக்கும் ஒரு முகவரியாய் இன்று வரை இருக்கிறார். 1979-ல் வெளிவந்த மங்கள வாத்தியம்(கமல், ஸ்ரீப்ரியா) போன்ற பல படங்களை தன் மகன் கோபி கிருஷ்ணாவுக்கு தயாரிக்க உதவினார். 1952-ல் தொடங்கிய இவரின் இசைப்பயணம், 2013-ல் தில்லு முல்லு படம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களையும், பாடல்களையும் தந்து இன்று வரையில் பேசப்படுகிறார். ஆனால் தயாரிப்பாளராய் சில படங்கள் அவருக்கு தோல்வியை தந்தாலும் சினிமா மீது கொண்ட காதலால் அந்த வெற்றிடத்தை இசையால் நிரப்பியவர் எம்.எஸ்.வி.


இளையராஜா


1976-ல் அன்னக்கிளி படம் மூலம் அனைவரையும் தன் இசையால் திரும்பி பார்க்க வைத்தவர், பாடலை விரும்பி கேட்க வைத்தவர் இளையராஜா. கிராமத்து மண் இசையை கேட்க வைத்தார், உலகமெங்கும் ஊரையும் உறவையும் பாட்டாலும், இசையாலும் பந்தி வைத்தார். இவருக்குள்ளும் தயாரிப்பாளர் ஆசை 1981-ல் அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் வெளிவந்தது. முரளி என்ற கார்த்திக்கை அறிமுகம் செய்தார். தன் மகன் பெயரையே அவருக்கு சூட்டி மகிழ்ந்தார்.


தன் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் பெயரைக் கொண்டு பாவலர் கிரியேஷன்ஸ் என்ற பேனரில் அலைகள் ஓய்வதில்லை, பொம்முகுட்டி அம்மாவுக்கு, ராஜாதி ராஜா, சிங்கார வேலன் போன்ற பல படங்களை தயாரித்து வெற்றி பெற்றார். 1983-ல் இளையராஜா பிக்சர்ஸ் என்ற பேனரில் ஆனந்த கும்மி படத்தை தயாரித்தார். பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அஸ்வினி நடிக்க வைரமுத்து சொன்ன கதையை இளையராஜா இசையில் படமாக்கினர். படம் பெரிய தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து இரண்டு மூன்று படங்களுக்கு பிறகு தயாரிப்பையே நிறுத்தி விட்டார் ராஜா. அதன்பிறகு அவர் ஆசை இசையாக எல்லா இடமும் இன்று நிரம்பி வழிகிறது.


கங்கை அமரன்


இளையராஜாவின் சகோதரர் என்ற அடையாளத்துடன் 1979-ல் ஒரு விடுகதை தொடர்கதை, சுவரில்லாத சித்திரங்கள் போன்ற படங்களின் மூலம் இசையமைப்பாளராக அவதாரமெடுத்தார் கங்கை அமரன். 1982-ல் கோழிகூவுது படத்தை இயக்கினார். பல படங்களில் பேசப்பட்டவர், இவருக்கும் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் ஆசை வர அம்மாஸ் பிக்சர்ஸ் என்ற பேனரில் 1993-ல் கோயில் காளை, 1985-ல் உரிமை போன்ற படங்களை தயாரித்தார். பல கடனில் சிக்கி பிறகு பாடல் எழுதி, இசையமைத்தும் அந்த கடனை அடைத்தார். மீண்டும் படம் தயாரிக்கும் ஆசை வந்தது. 15 வருடங்களுக்கு பிறகு பூஞ்சோலை(சங்கீதா அறிமுகம்) படத்தை பிரபு நடிப்பில் எடுத்து இன்று வரை ரிலீஸ் பண்ண முடியாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். தயாரிப்பாளராய் என்னால் சிறப்பிக்க முடியவில்லை, பல ஏமாற்றங்கள், கணக்கை சரிபார்க்க முடியவில்லை, இளகிய மனசால் யாரையும் எடுத்தெறிந்து பேச முடியவில்லை. போதுமடா சாமி, நமக்கு இது சரிவராது என்று தயாரிப்பை நிறுத்தி கொண்டதாக சொல்கிறார் கங்கை அமரன். ஆனாலும் இவருக்குள்ளும் சின்ன நம்பிக்கை, தன் மகன் வெங்கட்பிரபுவின் 2வது படமே இவர் தயாரிக்க வேண்டியதாம், விரைவில் தன் மகனே தன்னை தயாரிப்பாளராக்குவார் என்கிறார் கங்கை அமரன்.


எஸ்.எஸ்.குமரன்


சென்னை பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ஒளிப்பதிவாளராக படித்தவர் எஸ்.எஸ்.குமரன். படிக்கும்போதே எடிட்டிங், இயக்கம், இசை என்று எல்லா துறையிலும் பயின்று பூ படத்தில் இயக்குநர் சசி மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார். அதன்பின் சற்குணம் இயக்கிய களவாணி படமும் பெரிய அங்கீகாரத்தை குமரனுக்கு கொடுத்தது. தொடர்ந்து விருந்தாளி போன்ற சில படங்களுக்கு இசையமைத்தார். இங்கே தான் இவருக்கு தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்பா சுப்பையா, அம்மா மாணிக்கம்மாள் பெயரின் முதல் எழுத்தை வைத்து சுமா பிக்சர்ஸ் என்ற பேனரில் தேனீர் விடுதி என்ற படத்தை எடுத்தார். படம் தோல்வியை தழுவியது.ஆனாலும் தளராமல் அடுத்தப்படியாக கேரள நாட்டிளம் பெண்களுடனே என்ற படத்தை எடுத்தார். இந்தப்படமும் தோல்வி படமாக அமைய தற்போது தயாரிப்பை தற்காலிகமாக ஒத்திவைத்து விட்டு இனிப்பு காரம் மற்றும் இரண்டு பெயரிடப்படாத படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.


தொடர்ந்து தோல்வியை சந்தித்தும், தயாரிப்பாளர் எண்ணம் மட்டும் மாறுவதாக இல்லை போல என்று குமரனிடம் கேட்டால், முழு சினிமாக்காரனாக என்னை தயார் படுத்திவிட்டேன். நானே இயக்கி, இசையமைத்து ரிலீஸ் செய்வது என்பது சாதாரணம் இல்லை, வெற்றி தோல்வி 2வது தான். எனக்கான அங்கீகாரம் தான் இந்த போராட்டம். எனக்கு கிடைத்த வெற்றின்னா, எனக்கு கிடைத்த அனுபவம் தான் லாபம் என்பேன். ரொம்ப சவால் நிறைந்த துறை இது. என் பெயரை எல்லோருக்கும் தெரிய வைத்துவிட்டேன், அடுத்து கொஞ்சம் பணம் சம்பாதிக்கும் அளவு அனுபவத்தை தெரிந்து கொண்டேன். இதுபோதுமே, டிசம்பர் மாதம் குல்பி என்ற படத்தை தயாரித்து, இயக்கி இசையமைக்க போகிறேன். நடிகர்கள் தேர்வு நடைபெறுகிறது. விரைவில் நானும் வெற்றி பெற்று பேசப்படுவேன் என்ற நம்பிக்கை வார்த்தையை மட்டும் நம்மிடம் வைக்கிறார். காலம் ஒருநாள் அவருக்கு கைகூடும்.


விஜய் ஆண்டனி


2005-ல் வெளிவந்த சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து டிஸ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், வேலாயுதம் போன்ற படங்களுக்கு இசையமைத்து, மாஸ் ஹிட் பாடல்களை கொடுத்தார். தான் தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை வந்தபோது, கூடவே நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. தானே நடித்து, தானே இசையமைத்து, தானே தயாரிப்பு பணி செய்யும் விஜய் ஆண்டனி, 2012-ல் வெளிவந்த நான் படம் கொஞ்சம் வெற்றியை கொடுத்தது. பிறகு விஜய் ஆண்டனி பிலிம் பேக்டரி தொடங்கி, ஒரு பக்கம் இசை, நடிப்பு என்று பரபரப்பாக இருக்கிறார். விரைவில் இயக்குநர் நிர்மல் குமார் இயக்கத்தில் சலீம் பட ரிலீஸ்க்காக காத்திருக்கிறார். சரியான திட்டமிடலும், தெளிவான கணக்கு வழக்கும் இருந்தால் இந்த துறை மட்டும் அல்ல எந்த துறையிலும் ஜெயிக்கலாம் என்கிறார் விஜய் ஆண்டனி.


ஜீ.வி.பிரகாஷ்


வெயில் படம் மூலம் இளம் வயதில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜீ.வி.பிரகாஷ். தொடர்ந்து குசேலன், ஆடுகளம், அங்காடித்தெரு, தாண்டவம், பரதேசி, ராஜா ராணி என்று இவர் இசைப்பயணம் உயர்ந்து கொண்டே போனது. வசந்தபாலன் முதல் பாலா வவைர பிடித்து போன இசையமைப்பாளராக வலம் வந்தார் ஜீ.வி. வெற்றிமாறன் உதவியாளர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய மதயானைக்கூட்டம் படத்தில் தயாரிப்பாளராக ஜீ.வி.பிரகாஷ்குமார் புரொடக்ஷ்ன்ஸ் என்ற பெயரில் படம் தயாரித்தார். படம் பெரிய வெற்றி இல்லையென்றாலும் ஓரளவிற்கு வெற்றி பெற்றது. இதற்கடுத்து இரும்புக்குதிரை, கொம்பன் மற்றும் இந்தி படம் அக்லி, தான் ஹீரோவாக நடித்து வரும் பென்சில் உள்ளிட்ட படங்களில் இசையமைப்புக்கான பணியில் பிஸியாக இருக்கிறார். இதனால் கதை கேட்பது, படம் தயாரிப்பது போன்ற வேலைகளை சற்று தள்ளி வைத்திருக்கிறார் ஜீ.வி. இசையமைப்பு பணிகளை முடித்துவிட்டால் பாதி டென்ஷன் குறைந்து விடும் பிறகு கதை கேட்பது, தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்தலாம் என்பது இவரது கருத்து.


ஏ.ஆர்.ரஹ்மான்


1992-ல் ரோஜா படம் மூலம் மணிரத்னத்தால் அறிமுகம் செய்யப்பட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். பம்பாய், இந்தியன், ஜீன்ஸ், தில்சே, ஸ்லம்டாக் மிலினியர், எந்திரன் போன்ற படங்களின் மூலம் இந்திய இசையை உலகளவில் எடுத்து போன பெருமை ரஹ்மானுக்கு உண்டு. மேலும் ஆஸ்கர் நாயகனாக அகிலம் முழுவதும் பேசப்பட்டார். இசைக்கு முழு முகவரி இவரால் கிடைத்தது. படம் இயக்க போகிறார், தயாரிக்க போகிறார் என்று நீண்ட நாட்களாகவே ரஹ்மானை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. விரைவில் ஒய்.எம். மூவிஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தமிழ் மற்றும் இந்தி படங்களை தயாரிக்க இருக்கிறார். தற்போது அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். தமிழில் இவர் எழுதி வரும் கதையே படமாகிறது என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.


என்.ஆர்.ரகுநந்தன்


2010-ல் வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று என்ற படம்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் என்.ஆர்.ரகுநந்தன். சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை, மதயானைக்கூட்டம், மஞ்சப்பை போன்ற படங்களுக்கு இசை அமைத்ததின் மூலம் வெற்றி பெற்ற இசையமைப்பாளராக பிஸியாக வலம் வருகிறார். தற்போது சசிகுமார் நடிக்கும் படம், மஞ்சப்பை இயக்குநரின் அடுத்தபடம், சுசீந்தரனின் உதவியாளர் இயக்கும் படம், பாரதிராஜா இயக்கும் படம் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி உள்ளார் ரகுநந்தன். இந்தபடங்கள் முடிக்கவே 2015 ஆண்டாகிவிடும். 2016-ல் நான் தயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளேன். இதன்மூலம் சிறு படங்களை தயாரித்து திறமையான இயக்குநர்கள், நடிகர்களை அறிமுகம் செய்ய இருக்கிறேன் என்கிறார் ரகுநந்தன்.


ரா பகலாக இசையமைப்பாளர்கள் இசையமைத்து உழைத்து சம்பாதித்த பணத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படம் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இன்னொரு பக்கம் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகமாக சினிமாவில் நுழைந்து படங்களை தயாரித்து வருகின்றனர். இப்படியாக கோடிகள் புரளும் தமிழ் சினிமாவில் எடுக்கின்றன அனைத்து படங்களும் வெற்றி பெறுவது இல்லை. ஆனாலும் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் கொடி கட்டி பறப்பார்களா...? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இசையமைப்பாளர்களின் அடுத்தகட்ட முயற்சிக்கு ஒரு வாழ்த்து சொல்வோம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in