Cinema Home
 
சினி தகவல்கள்
 

  சினிமா முதல் பக்கம்
 
      சொல்ல சொல்ல இனிக்கும் விமர்சனம்  

பட காட்சிகள் >>

தினமலர் விமர்சனம்

காதல்.. காதல்... காதல்...! காதல் போயின் சாதல்...! எனும் தேவதாஸ் காலத்து காதலுக்கு மாற்றாக காதல்... காதல்... காதல்...! காதல் போயின் பிரி‌தொரு காதல்..! எனும் இக்காலத்துக்கு ஏற்றவாறு புதிய தத்துவம் சொல்லி வந்திருக்கும் புதிய படம்தான் சொல்ல சொல்ல இனிக்கும்!.

பார்த்து சிரிக்கும் பெண்களிடமெல்லாம் படடென்று பரவசமாகி காதல் கொள்ளும் இளைஞன் சத்யாவிற்கு தன் காதலை புரிந்து கொள்ளும் காதலி கிடைக்காத வருத்தம்! மூன்று காதல்கள், மூன்று காதலிகள் கழன்று கொண்டு போன வருத்தம் சத்யாவான ஹீ‌ரோ நவ்தீப்பிற்கு என்றால், நவ்தீப்பின் நண்பராக வரும் அபிநயோ, தன்னை உயிருக்கு உயிராக காலிக்கும் பெண்ணின் உடம்பு கிடைத்ததும் அவரை உதறி விட பார்க்கிறார். அபிநய்யை தட்டி, குட்டி, அவரது காதலுடன் சேர்த்து வைப்பதுடன் தனக்கேற்ற காதலியை நவ்தீப் தேடி கண்டு பிடிப்பதும்தான் சொல்ல சொல்ல இனிக்கும் படத்தின் மீதிக் கதை!

முடிந்தவரை இந்த கதையையும், புதிய காதல் நீதியையும் அழகாகவும், ஆபாசமில்லாமலும் சொல்ல முயன்று அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் முரளி அப்பாஸ். ராசி படத்திற்கு பிறகு முழுதாக 12 வருட இடைவெளிக்கு பிறகு இப்படத்தை இயக்கியிருக்கும் டைரக்டர், அந்த கேப்பும் காட்சிகளில் வெளிப்படுவதை நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்.

காதலிப்பது, நண்பர்களுடன் அரட்டை கச்சேரி நடத்துவது என இக்கால இளைஞர்களின் பிரதிபிம்பமாக உல்லாசமாக திரியும் சத்யாவாக நவ்தீப் முன்பாதியில் ஜனரஞ்சகமாகவும், பின் பாதியில் சீரியசாகவும் நடித்து தன் பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார். நவ்தீப்பின் நண்பர்ளாக வரும் அபிநய், சத்யன் அண்ட் கோவினரும் பாத்திரங்களுக்கேற்ற தேர்வு. ஆனால் சத்யன் காமெடி என்ற பேயரில் கடிப்பதைத்தான் தாங்க முடியவில்லை.

சுஜா, மதுமிதா உள்ளிட்ட நான்கு நாயகியரில் நால்வருமே மனதில் ஒட்டாமல் ஓரங்கட்டப்படுவது வருத்தம். சத்யாவின் தந்தையாக வரும் விஜயகுமார், தாய் மீரா கிருஷ்ணன், போலீஸ் அதிகாரி ஆசிஷ் வித்யார்த்தி, அலெக்ஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட பாத்திரங்கள் படம் முழுக்க பரவி இருந்தாலும், ஹீரோ நவ்தீப் உள்ளிட்ட எல்லோரையும் ஓரம் கட்டி விடுகிறார் பிரகாஷ்ராஜ். மாலை ‌போட்டு உதவி கேட்டால், எதிராளி யார்... எவன்... என பாராமல் அவர்களுக்கு உதவி செய்ய தன் அடியாள் படை பரிவாரங்களுடன் கிளம்பும் பிரகாஷ் ராஜின் பாத்திரம் பிரமாதம்.

காதல் தோல்வி... தேவதாஸ் தாடி.. என இந்த காலத்திலும் திரியும் இளைஞர்களுக்கு தன்னால் இயன்ற வரை புத்தி சொல்லி இருக்கும் இயக்குனருக்கு, பரத்வாஜின் இசை, ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் உறுதுணையாக இருந்தும், ஏதோ ஒன்று இல்லாததால் சொல்ல சொல்ல இனிக்கும் சற்றே கசக்கிறது.

சொல்ல சொல்ல இனிக்கும் : புளிக்கும் துவர்க்கும் கசக்கும்!

          << விமர்சனம் முதல் பக்கம்                                                                               சினிமா முதல் பக்கம்       
 
   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.