Cinema Home
 
சினி தகவல்கள்
 

  சினிமா முதல் பக்கம்
 
      கண்ணுக்குள்ளே விமர்சனம்  

பட காட்சிகள் >>

தினமலர் விமர்சனம்

நட்புக்கும், காதலுக்கும் புதிய விளக்கம் சொல்லி வந்திருக்கும் படம்தான் கண்ணுக்குள்ளே..!

மிதுனும், யுகேந்திரனும் பள்ளிப்பருவ நண்பர்கள். விபத்து ஒன்றில் கண் பார்வை பறிபோக, அதற்கு தான்தான் காரணம் என கருதும் யுகேந்திரன், அன்று முதல் மிதுனுக்கு கண்ணும் கருத்துமாக இருக்க உறுதி பூணுகிறார். ஆனால், விதி அந்த சிறு பிரயத்திலேயே மிதுனை கண் தெரியாதோர் பள்ளியில் கொண்டு போய்விட, யுகேந்திரனை அவரது தாசில்தார் அப்பாவின் டிரான்ஸ்பர் ரூபத்தில் வேறு ஊருக்கே அழைத்து போய் விடுகிறது. ஒரு பக்கம் அநாதை மீதுன் பள்ளி பாடங்களுடன் இசை கருவிகளையும் பயின்று தேர்ந்து, தனது பள்ளி ஆசிரியரும்,  சர்ச் பாதருமான சரத்பாபு உதவியுடன் ஒரு சர்ச்சில் வயலினிஸ்ட்டாக, மற்றாரு புறம் யுகேந்திரனும, அவரது தங்கை அனுவும் பெரியவர்கள் ஆகின்றனர். யுகேந்திரனை தேவி வருகின்றார் மீதுன். அங்கு யுகேந்திரனின் தங்கை அனுவிற்கும், மிதுனுக்கும் இடையில் காதல் கண்ணாமூச்சி ஆடுகிறது. வில்லனாகப் போகிறார் யுகேந்திரன் எனப் பார்த்தால், தன்னால் கண் பார்வை பறிபோன மிதுனுக்கு தன் தங்கைதான் சரியான ஜோடி என சொல்லி அவர்களது காதலுக்கு சலாம் போதுகிறார். இதற்கிடையில் காதலி அனுவால் சென்னை போய் சினிமா இசைகுழுவில் சேருகிறார் மிதுன். இந்நி‌லையில் விதி விளையாட, யுகேந்திரன் சாலை விபத்தொன்றில் மரணமடைகிறார். ஆனால் அவரது கடைசி ஆசை, தனது கண்ணை தன் நண்பன் மிதுனுக்கு பொருத்த வேண்டும் என்பது! முதலில் அதை மறுக்கும் மிதுன் பின், நண்பனின் ஆசையை நிறைவேற்றி, பார்வை பெறுகிறார். பார்வை கிடைத்ததுமே அங்கிருந்து எஸ்கேப் ஆகும் மிதுன், அனுவை அப்போ‌ என விட்டு விட்டு வந்து சென்னையி்ல தனக்கு தெரிந்த இசை நண்பரின் மகள் அபர்ணாவை கட்டிக் கொண்டு அழகான பெண் குழந்தைக்கு அப்பாவும் ஆகிறார். ஆனாலும் வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் பழைய காதலியை தேடிப்போகும் மிதுன், இப்படியெல்லாம் நடந்து கொள்ள காரணம் என்ன? காதலி அனு என்ன ஆனாள்? உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு விடை சொல்கிறது கண்ணுக்குள்ளே படத்தின் மீதிக் கதை!

ஜிப்பா, பைஜாமா, தாடி, கூந்தல் என மிதுன் வயலினிஸ்ட்டாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது மனைவியாக வரும் அபர்ணா தன் மு‌ந்தைய படங்களை காட்டிலும் இந்தப் படத்தில் அழகான அம்சமாக தெரிகிறார். அறிமுக இயக்குனர் லேணா மூவேந்தர், தான் அடக்கி வைத்திருந்ததை எல்லாம் அபர்ணா மூலம் பேச வைத்திருப்பதை தவிர்த்திருந்தால் அபர்ணா... சூப்பர்ணா என பாராட்டுப் பத்திரம் பெற்றிருப்பார். மற்றொரு நாயகி அனு புதுமுகம் என்றாலும் சில காட்சிகளில் அபர்ணாவை எல்லாம் ஓரங்கட்டி விடுகிறார். ஓவர் டேக் செய்கிறார். அனு உடம்பை குறைத்தால் ஒரு வல்லிய ரவுண்டு வரலாம் தமிழ் சினிமாவில்! செய்வாரா?

மிதுன், அபர்ணா, அனு மாதிரியே யுகேந்திரன், சரத்பாபு, சண்முகராஜன், மிதுன் - அபர்ணா ஜோடியின் குழந்தை, பள்ளிப்பருவ யுகேந்திரன் - மிதுனாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்டவர்கள் பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு!

சிங்கமுத்து, முத்துக்காளை, கிரேன் மனோகரின் பஸ் பயண திமிங்கல காமெடி மெதுவாக செல்லும் படத்தையும், பஸ் பிரயாணத்தையும் விறுவிறுப்பாக்குவதுடன் சிரிப்பையும் வரவழைப்பது சிறப்பு!

சில பல காட்சிகளில் அபர்ணா நிறுத்தாமல் தொண தொணப்பதும், அதற்கு பதிலே பேசாமல் மிதுன் மவுன சாமியாராக வயலினும், கையுமாக திரிவதும், பெண்டாட்டி, பிள்ளையை விட்டு விட்டு மிதுன் பெட்டி, படுக்கையுடன் கிளம்புவதும் புரியாத புதிராக தொக்கி நிற்பதை இயக்குனர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். இப்படி ஒருசில பலவீனங்கள் இருந்தாலும், படம் பார்ப்பவர்களின் பள்ளிப்பருவ நினைவுகளைத் தூண்டும் நாயகரின் சிறுவயது காட்சிகள், அதற்கு பக்கபலமாக இசை மீட்டும் இசைஞானி இளையராஜா, ப்ளாஷ்பேக் காதல், அந்த காதலை மறுத்து ஓடியதற்கு மிதுன் சொல்லும் க்ளைமாக்ஸ் உருக்கமான காரணம் உள்ளிட்ட எண்ணற்ற பலங்கள் படத்தை காப்பாற்றுகிறது.

படம் முடிந்து வெளியே வந்து வெகு நேரமாகிய பின்பும், இளையராஜாவின் இசை காதுக்குள்ளேயும், நாக சரவணனில் குமரி கடல் பகுதி ஒளிப்பதிவு, கண்ணுக்குள்ளேயும், லேனா மூவேந்தரின் காட்சி அமைப்பும், கதை சொன்ன விதமும் மனசுக்குள்ளேயும் நீங்கா இடம் பிடித்து ரீங்காரமிடுகின்றன!

கண்ணுக்குள்ளே: நெஞ்சுக்குள்ளே...!

          << விமர்சனம் முதல் பக்கம்                                                                               சினிமா முதல் பக்கம்       
 
   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.