தினமலர் விமர்சனம்
சட்டம் பயிலும் மாணவர்கள்... முதலில் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தி வந்திருக்கும் படம் சூரியன் சட்டக்கல்லூரி. சமீபத்தில் சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் இடையே நடந்த வன்முறை சம்பவங்களுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை... என்றாலும், ஏதோ சம்பந்தம் இருப்பதாகவும் நம்மை (ரசிகர்களை) சிந்திக்க வைப்பது சூரியன் சட்டக்கல்லூரியின் சிறப்பு!
சட்டக்கல்லூரிக்குள் தம் அடிக்கக் கூடாது, தண்ணி அடிக்கக் கூடாது... உள்ளிட்ட எண்ணற்ற சட்ட திட்டங்களுடன் மாணவர்களை கட்டுக் கோப்பாக வைத்துக் கொண்டு பேராசிரியர்களின் பேச்சை கேட்டு நடக்கும் மாணவர் சேர்மனாக வளைய வருகிறார் ஹீரோ கஜினி. அவரிடம் ஐடியா கேட்டுத்தான் கல்லூரி பிரின்ஸ்பால் ராதாரவியே கல்லூரி காரியங்களை செய்வார் என்றால் பார்ததுக் கொள்ளுங்களேன் கஜினியின் நன்னடத்தையை..! இச்சூழலில் சட்டம் படித்தே தீர வேண்டுமென எம்.பி.,யின் சிபாரிசுடன் சட்டக்கல்லூரியி்ல அடியெடுத்து வைக்கும் வில்லன் பவனுக்கும், கஜினிக்குமிடையே மோதல் முற்றுகிறது. அதன் விளைவு... சட்டத்தை மதிக்க வேண்டும் என சத்திய பிரமாணம் செய்து கொண்டிருக்கும் ஹீரோவே சட்டத்தை கையில் எடுத்து வில்லன் கோஷ்டியின் கொட்டத்தை அடக்குவதுடன், நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டு சிறை செல்வதே சூரியன் சட்டக்கல்லூரியின் மொத்த கதையும்! இதனூடே புதுமுகம் மித்ராவுடனான கஜினியின் நட்பும், பேராசிரியர் எம்.எஸ்.பாஸ்கரின் காமெடி கலாட்டா, கஞ்சா கருப்பு, காதல் சுகுமார், ஆர்த்தி அண்ட் கோவினரின் கடி இன்னும் பல விஷயங்களை கலந்து கட்டி கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆர்.பவன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதல்கோட்டை தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு மற்றுமோர் வெற்றிப்படமாக இது அமையும்.
ஆரம்ப கால விஜய் மாதிரி இருக்கிறார் புதுமுகம் கஜினி. பிரபல பட அதிபர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மொய்தீனின் வாரிசாம்! முதல் படத்திலேயே ஆக்ஷன் வரும் அளவிற்கு நடிப்பும் வருவதால் நிச்சயம் தாக்கு பிடிப்பார் என நம்பலாம்!
புதுமுகம் மித்ரா பூசி மெழுகினார்ப் போல் ஆன்ட்டி சைஸில் இருந்தாலும், பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். பாவம் டான்ஸ் தான் வரமாட்டேன் என்கிறது! உடம்பை குறைத்தால் நிறைய வாய்ப்பும் வரும் சேச்சிக்கு!
பவன், அண்ணன், தம்பி என இரட்டை வேடங்களில் வெளுத்து வாங்கி இருக்கிறார்! ஸ்டூடண்ட் ரவுடியா? இனி, கூப்பிடு பவனை என்பார்கள். ராதாரவி பிரின்ஸ்பால் கேரக்டருக்கும், எம்.எஸ்.பாஸ்கர், சட்டக்கல்லூரியில் வாஸ்தும், ஜோதிடமும் பேசும் பேராசிரியர் கேரக்டருக்கும் சரியான தேர்வு. ஆனால் கஞ்சா கருப்பு, காதல் சுகுமார், சாம், ஆர்த்தி ஆகியோர் சரியான கடி. யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு பிரமாதம் என்றால், தேவாவின் இசையும் கானா பாடல்களும் தேவாமிர்தம். தேவா இப்படத்திற்கு பின் மீண்டும் ஒரு ரவுண்டு வரப்போவது நிச்சயம்!
இப்படி ஒரு சட்டக்கல்லூரியும், மாணவர்களும் இல்லையே என ஏங்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஆர்.பவன்!
சூரியன் சட்டக்கல்லூரி : சூப்பர் சட்டக்கல்லூரி.
|