Cinema Home
 
சினி தகவல்கள்
 

  சினிமா முதல் பக்கம்
 
      திரு திரு துறு துறு விமர்சனம்  

பட காட்சிகள் >>

தினமலர் விமர்சனம்

எதையும் விளையாட்டுத்தனமாக செய்துவிட்டு வம்பில் மாட்டிக் கொண்டு திரு திரு... என்று முழிக்கும் ஹீரோவும், ஒவ்வொன்றையும் திட்டமிட்டு துறு துறு... என்று செய்து ஜெயிக்கும் ஹீரோயினும் ஒரு விளம்பர கம்பெனியில் ஒன்றாக வேலை செய்கின்றனர். கம்பெனியை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் இருவரும் கொள்ளும் ஊடலும், கூடலும்... அதனால் வரும் காதலும்தான் திரு திரு துறு துறு!

திரு திரு நாயகர் அஜ்மல். துறு துறு நாயகி புதுமுகம் ரூபா. விளம்பர நிறுவனம் நடத்துகிறார் மவுலி. அஜ்மலை மகனாக நினைக்கும் மவுலியின் கம்பெனியை தூக்கி நிறுத்தும் கட்டாய பொறுப்பு அஜ்மலுக்கு. தங்கள் நிறுவனம் தயாரிக்கும் விளம்பர படம் ஒன்றிற்கு ஒரு குழந்தை தேவைப்பட, அ‌தை கடைசி நேரத்தில் தேடிப் பிடிக்கிறார். ஆனால் அக்குழந்தை அதன் பெற்றோரிடம் இருந்து கடத்தப்பட்டுள்ள குழந்தை எனும் உண்மை தெரிந்ததும், அதை அந்த விளம்பர படத்தில் அசட்டையாக நடிக்க வைக்கும் அஜ்மலுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள். விளம்பர ஒப்பந்தத்திற்கு குழந்தையின் பெற்றோர் கையெழுத்து மற்றும் குழந்தையை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம்,  திருடப்பட்ட குழந்தை என்பதை முதலாளி மவுலியிடம் மறைப்பது, அந்த விளம்பரம்தான் கம்பெனியை காப்பாற்ற வேண்டிய சூழல் என்பன போன்ற இன்னும் பல சிக்கல்களுக்கு எல்லாம் தோளோடு தோள் நின்று அஜ்மலுக்கு உதவி செய்கிறார் ஹீரோயின் ரூபா. இதுதான் திரு திரு துறு துறு படத்தின் மொத்த கதையும்! இதனூடே அஜ்மல் - ரூபாவின் நட்பு காதலாவதையும், மவுலியின் மறதி காமெடிகளையும், குழந்தைக்காக துரத்தும் வில்லன்களின் ஆக்ஷனையும் கலந்து கட்டி படத்தை ஜனரஞ்சகமாக தர முயன்றிருக்கிறார் பெண் இயக்குனர் ஜே.நந்தினி! அதில் பாதி வெற்றி.. பாதி தோல்வி..!

திரு திரு அஜ்மல் பாத்திரத்திற்கு ஏற்ற விறு விறு..! முந்தைய படங்களைக் காட்டிலும் இதில் நடிப்பில் நிறையவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

துரு துரு ரூபா இப்போது தானே எண்ட்ரி ஆகியிருக்கிறேன். சற்றே பொறு.. பொறு... என்று குடும்பப் பாங்கிற்கும், கவர்ச்சிக்கும் இடையில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறி இருப்பதாக தோன்றுகிறது. ஆனாலும் அவரஇ இளமை... இனிமை!

வழக்கம்போலவே மவுலி உதடு பிரியாமல் ஜோக் சொல்லி நம்மையும் வாய் விட்டு சிரிக்க வைக்கிறார். அவரது பெயர் மறதியும், மனைவியிடம் இப்பக்கூட சைக்கிள் ஓட்ட நான் ரெடி..! என்று பேசும் யதார்த்தமும் மகிழ்ச்சி, நெகிழ்ச்சி ஆகியவற்றுக்கு சின்ன சாம்பிள்!

மணிசர்மாவின் இசையும், சுதிரின் ஒளிப்பதிவும் பெண் இயக்குனர் நந்தினிக்கும் பெரிய பலம். ஆனால் ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் நிறைய இடங்களில்... குறிப்பாக க்ளைமாக்ஸில் தெரியும் நாடக் தன்மையை தவிர்த்திருந்தால் திரு திரு துறு துறு நல்ல விறுவிறு படமாக அமைந்திருக்கும்!

திரு திரு துறு துறு : விறு.. விறு.. பொறு.. வெறு!

----------------------------

விகடன் விமர்சனம்

கேர்லெஸ் ஹீரோ, பெர்பெக்ட் ஹீரோயின் இருவரையும் துறுதுறு குழந்தை ஒன்று திருதிருவென முழிக்க வைத்தால்... அதுதான் படம்.

மவுலி நடத்தும் விளம்பர நிறுவனத்தில் பணி புரிகிறார் அஜ்மல். பங்சுவாலிட்டி என்றால் 10 அடி தள்ளி நிற்பார். அதே கம்பெனியில் வேலை பார்க்கும் சின்சியர் சிகாமணி ரூபா மஞ்சரி. நஷ்டத்தில் ஓடும் விளம்பர நிறுவனத்துக்கு பெரிய ஆஃபர் ஒன்று வருகிறது. அதற்கு உடனடி தேவை ஓர் அழகான குழந்தை. கொழுகொழு குழந்தையை தேடி அலையும் அஜ்மலின் கையில் சிக்குகிறது அமுல்பேபி ஒன்று. அனால், அது எங்கிருந்தோ கடத்தப்பட்ட குழந்தை. இதை மௌலிக்கு தெரியாமல் அஜ்மல் சாமர்த்தியமாக சமாளிக்க தோள் கொடுக்கிறார் தோழி ரூபா. இருவரும் குழந்தையின் பெற்றோர் யார் என்று தேட ஆரம்பிக்கிறார்கள். இவர்களுக்குள் ஏற்படும் சின்னச்சின்ன ஈகோ பிரச்னைகள் தான் இருவரும் சேர்ந்து எதிர்க்கொள்ளும் சவால்கள், சங்கடங்களை ஜாலியாக சொல்கிறது படம்.

அழகான காதல் + காமெடி + த்ரில்லர் படத்தை தந்திருக்கும் அறிமுக இயக்குனர் நந்தினிக்கு வாழ்த்துக்கள். முதல் 10 நிமிடங்கள் தொய்வாக செல்கிறது படம். இன்னுமொரு ஹீரோ ஹீரோயின் ஈகோ படமா என்று அலுப்பு வரும்போது குறுக்கிடுகிறது அந்த குழந்தை. அதற்கப்புறம் சவடால்கள், சண்டைகள் இல்லாமல் வேகமெடுத்து பறக்கிறது திரைக்கதை.

பேஸ்ட்டை தலைகீழகாக பிரஷ்ஷில் தடவுவதில் இருந்து போதையில் ஜட்டியை பிரிஜ்ஜுக்குள் வைத்து தேடி அலைவது என அலட்சியமான கேரக்டரை அலட்டாமல் செய்திருக்கிறார் அஜ்மல். ரூபாவோடு சதா வம்பிழுக்கும் அஜ்மல், பிற்பாடு அவரோடு நட்பாகி காதலாகி கசிந்துருகுவது அழகு கவிதை.

தமிழுக்கு க்யூட் ஹீரோயின் வரிசையில் நல்வரவு ரூபா மஞ்சரி. அஜ்மல் வீட்டில் தங்குவதற்காக பெற்றோரிடம் பொய் சொல்லும் போது ரூபா மஞ்சரி முகத்தில் செஞ்சுரி எக்ஸ்பிரஷன்கள்.

ஒரு சென்டிமென்ட் கதாபாத்திரத்திரம். ஆனால், அழுது வடியக்கூடாது. இரண்டையும் பேலன்ஸ் செய்து சமாளித்திருக்கிறார் மவுலி. ஞாபக மறதியால் பெயர்களை தப்புத்தப்பாக அவர் உச்சரிப்பது சுவாரஸ்யம். ஆனால் அது மீண்டும் மீண்டும் ரிப்பீட் ஆவது அலுப்பு.

பக்கத்து ப்ளாட்காரர்களிடம் குழந்தையை மறைக்க அஜ்மல் படும்பாடு, மர்மமான அந்த ஹாஸ்பிடல் கம்பவுண்டர் என அவ்வப்போது சுவாரஸ்ய முடிச்சுப்போட்டு அதை காமெடியாக அவிழ்க்கிறார்கள். வில்லி நர்ஸை அஜ்மலும் ரூபாவும், மயிலிறகு, ஐஸ்கட்டி என விதவிதமாக டார்ச்சர் செய்யும் காட்சி சுவாரஸ்யம். ஆனால் போலீஸை இவ்வளவு துõரம் காமெடி பீஸ் ஆக்கிஇருக்க வேண்டாம். அஜ்மலும் ரூபாவும் பாண்டிச்சேரியில் செய்யும் சாகசங்கள் போலீஸ் ப்ரெண்ட் மூலமாகவே முடித்திருக்கலாமே? குழந்தையின் பெற்றோர் யார் என்பது தான்  முழுப்படத்துக்குமான கேள்வி. அந்த கேள்விக்கு பதில் கிடைத்த பின்னும் கதை முடிவுக்கு வராமல் இழுத்தடித்திருக்க வேண்டாமே?

மணிசர்மாவின் இசையில் அதிரிபுதிரி ஆரம்பம். டாக்டர் மாப்பிள்ளை ஓ.கே.வா பாடல்கள் மனதில் தங்குகின்றன. சுதீர் கே.சவுத்ரியின் ஒளிப்பதிவு படத்துக்கு அழகு  சேர்த்திருக்கிறது.

துறுதுறு குழந்தைகளை பார்க்கும் போதெல்லாம் கவலைகள் பறந்து விடும். இது அப்படி ஒரு துறுதுறு குழந்தை.

விகடன் மார்க் : 43/100

          << விமர்சனம் முதல் பக்கம்                                                                               சினிமா முதல் பக்கம்       
 
   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.