தினமலர் விமர்சனம்
விக்னேஷ்வரனாக பெயர் மாறியுள்ள விக்னேஷை பிதாமகன் விக்ரமாக்கும் முயற்சியில் பாதி வெற்றியையும், பேர் பாதி(?) தோல்வியையும் கண்டிருக்கும் கதையை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் படம்!
கதைப்படி ஒரு கொலையை பார்த்து நியாயம் கேட்கப் போன தன் காதல் மனைவியை, தான் வேலைபார்க்கும் உப்பள அதிபர்களே ஈவு இரக்கமில்லாமல் தீர்த்து கட்டியதைசற்றே தாமதமாக கேள்விப்படுகிறார் ஹீரோ! அப்புறம், அப்புறமென்ன? அவர்களை எல்லாம் சாட்சியில்லாமல் நாயகன் எப்படி பழி வாங்குகிறார்? என்பது மீதிக் கதை!
உப்பளத்தில் அனாதையாக அலைந்து, திரிந்து வேலை பார்க்கும் விசுவாசி சுடலீஸ்வனாகவும் சரி, வெறி கொண்டு முதலாளிகளை போட்டுத் தள்ளும் வெறி பிடித்த சுடலீஸ்வரனாகவும் சரி, விக்னேஷ்வரன் அதாங்க, நம்ம விக்னேஷ் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
நாயகியாக புதுமுகம் லக்ஷனா பழகிய முகமாக சிரித்து சிரித்து வளைய வந்து, கடைசியில் பரிதாபமாக இறந்து போவது அவர் மீது அனுதாபத்தை ஏற்படுத்துகிறது.
காமெடி காட்சிகள் எனும் போர்வையில் கஞ்சா கருப்பு கடித்து கொல்வதையும், உப்பளத்து விக்னேஷை பிதாமகன் விக்ரம் ஆக்கும் முயற்சியில் சம்மந்தம் இல்லாமல் அடிக்கடி சுடுகாட்டில் உலவ விட்டு புதையுண்டிருக்கும் பிணத்தின் மீது எல்லாம் படுத்து உறங்க விடுவதையும் தவிர்த்திருந்தால் ஈஷா பேஷா இருந்திருக்கும். எனினும், தூத்துக்குடி சண்டைக் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் மிக அழகாக படம் பிடித்து காட்டியுள்ள ஆர்.பி.பாலகணேஷின் ஒளிப்பதிவும், அதற்கு பக்கபலமான ஹரணின் இசையும் தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் புதுமை! அடிக்கடி உங்கய்யா டவுஸரு... என அலறும் வில்லனும் புதுசு என்றாலும் போர். புதியவர் பாலகணேசாவின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் சில இடங்களில் விக்னேஷ் என்ன லூஸா? என கேட்கத்தூண்டும் ஈசா பேஷா, தயாரிப்பாளருக்கு என்ன லாஸா? என்பது ரசிகர்களின் கைகளில் தான் இருக்கிறது!
ஈசா : ஐயயோ ஈஸ்வரா!!
|