| |
|
|
|
மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி விமர்சனம்
|
|
 |
|
பட காட்சிகள் >> |
|
தினமலர் விமர்சனம்
ஒரு பேருந்து பிரயாணத்தில் ஏற்படும் பால் ஈர்ப்பையே காதலாக்கி, கசிந்து உருக விட்டு, படம் பார்ப்பவர்களையும் உருக விட்டிருக்கும் கதையை உள்ளடக்கிய படம்தான் மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி.
ஊரில் காதலை எதிர்க்கும் பெற்றோர்களை எதிர்த்து காதலர்களை சேர்த்து வைக்கும் புனித பணியை (?) மேற்கொண்டிருக்கும் ஹீரோவிற்கு ஆசிரியர் வேலை கிடைக்கிறது. அந்த வேலையை ஏற்றுக் கொள்ள மதுரையில் இருந்து தேனி அருகில் இருக்கும் கிராமத்திற்கு பேருந்தில் கிளம்புகிறார் நாயகர். அந்த பேருந்தில் அவருக்கு காதலியும் கிடைக்க, ஊர் காதலை எல்லாம் சேர்த்து வைத்த ஹீரோ விடுவாரா என்ன? அவர் இறங்க வேண்டிய கிராமத்தில் தனக்காக காத்திருக்கும் நண்பர்களிடம் தன் பையை கொடுத்து விட்டு அதே நேருந்தில் நாயகியின் வசிப்பிடத்திற்கே தேடி புறப்படுகிறார் ஹீரோ. நாயகி இறங்கும் குக்கிராமத்தில் பெண் கேட்டு, நாயகியின் முறை மாமன்களால் பஞ்சாயத்தில் நிறுத்தப்படுவதும், அதன் பின் என்ன? என்பதும் தான் மேற்படி படத்தின் மொத்த கதையும்!
இதில் முன்பாதி படமும், பின் பாதியில் முன்பகுதி படமும் பேருந்திலும், பேருந்து சார்ந்த இடங்களிலுமே படமாக்கப்பட்டிருப்பதால் கதையும், படத்தில் இடம்பெறும் சோலைமலை பேருந்து வேகத்திலேயே முக்கால்வாசி பிரயாணிக்கிறது. மீதி கால்வாசியும் மதுரை, தேனி பக்கம் கோவில் வாசலில் நடக்கும் பஞ்சாயத்து, முரி வைத்தல் என புதுமையாக முரட்டு மாமன்கள், அசட்டு டீக்கடை முதலாளி சிங்கமுத்து, நாயகியின் வாயாடி அம்மா சாந்தினி, கதாநாயகனின் சித்தப்பா சுருளிப்பட்டி சிவாஜி உள்ளிட்டவர்களால் ஜெட் வேகத்தில் நகர்வது படத்திற்கு பெரிய பலம். இதுநாள் வரை நம் சினிமாவில் காட்டப்படும் பஞ்சாயத்திற்கும், தெருவில் நடைபெறும் பஞ்சாயத்துகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக படம் பிடித்து காட்டியதாற்காகடே இயக்குனர் ரதிபாலாவை பாராட்ட வேண்டும்.
கதாநாயகராக அரவிந்த் வினோத் பாத்திரத்தை உணர்ந்து பல இடங்களில் சாந்தமாகவும், சில இடங்களில் பாந்தமாகவும் நடித்து வந்தோமா... போனோமா.. ஹீரோக்கள் லிஸ்ட்டில் இடம் பிடிக்காமல் தப்பித்து விடுகிறார். பேஷ்.. பேஷ்...! நாயகி ஸ்ரித்திகா, புன்னகை இளவரசி எனும் பட்டம் பெரும் முயற்சியில் படம் முழுக்க சிரித்தபடியே வளைய வருகிறார். க்ளைமாக்ஸில் மட்டும் சற்றே நடித்து சபாஷ் சொல்ல வைக்கிறார்.
பஸ் கண்டக்டர் ரஜினியாக ராஜ்குமார், சிங்கமுத்து, குமரிமுத்து, நெல்லை சிவா, முத்துக்காளை, திருமங்கலம் கலைராசு, சுருளிப்பட்டி சிவாஜி, சாந்தினி, முறைமாமன் ராசுக்குட்டி பிரகாஷ் உள்ளிட்ட பழைய, புதிய நடிகர்களுடன் சோலைமலை பேருந்தும் ஒரு பாத்திரமாக படம் முழுக்க பரவி இருப்பது வாவ் சொல்ல வைக்கிறது.
எல்லோரது பிரயாணத்திலும் இது மாதிரி ஒரு காதல் எங்கிட்டாவது ஒரு ஓரத்தில் ஒளிந்து கொண்டிருக்கலாம். அதையே சற்று கற்பனையாக சேர்த்து அழகான கதையாக்கி, கருவாக்கி, படமாக்கி இருக்கும் இயக்குனர் ரதிபாலாவின் கதை, திரைக்கதை, இயக்கத்திற்கு சுருளிப்பட்டி சிவாஜியின் இயல்பான வசனமும், எஸ்.பி.எஸ்.குகனின் குளிர்ச்சியான ஒளிப்பதிவும், ஜேவியின் மலர்ச்சியான இசையும், கார்த்திக் சுப்பிரமணியத்தின் அளகான படத்தொகுப்பும் பக்கபலமாக இருந்து இப்படத்தை வெற்றிப் படமாக்கியுள்ளது.
மொத்தத்தில் இந்த படத்தை பார்க்கும் நாமும் மதுரைக்கும் தேனிக்கும் ஆண்டிபட்டி வழியாக சோலைமலை பேருந்தில் பயணித்த பிரம்மை ஏற்படுத்துகிறது. அதுவே இதன் வெற்றி!!
மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி : யதார்த்தம் டூ வெற்றி வழி தமிழ் சினிமா!!
----------------------------------
விகடன் விமர்சனம்
மதுரையில் இருந்த கிளம்பி தேனி போவதற்குள் ஹீரோவுக்கு வருகிற காதலும், காதல் நிமித்தமான மோதலுமே கதை.
மதுரையில் ஒரு விபத்தில் இருந்து ஸ்ரித்திகாவை காப்பாற்றுகிறார் அரவிந்த் வினோத். ஸ்ரித்திகா சொந்த கிராமத்துக்கு போக மதுரை டு தேனி பஸ்ஸில் ஏறுகிறார். வாத்தியார் வேலையில் சேர்வதற்காக அதே பஸ்ஸில் பயணம் செய்கிறார் அரவிந்த் வினோத். காதல் பாடல்களின் பின்னணியில் பார்வைகள் பரிமாற... இருவரும் காதல் டிக்கெட் எடுக்கிறார்கள். தன் சொந்த கிராமம் வந்ததும் ஸ்ரித்திகா இறங்க. அரவிந்த் வினோத்தும் இறங்கி நேரே ஸ்ரித்திகா வின் வீட்டுக்கு போய் பெண் கேட்கிறார். ஸ்ரித்திகாவின் முறை மாப்பிள்ளை துள்ளி எழ, மல்லுக்கட்டு ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஊர் பஞ்சாயத்து கூடுகிறது. பஞ்சாயத்தில் என்ன முடிவெடுத்தார்கள் என்பதே க்ளைமாக்ஸ்.
மெட்ராஸ் டு பாண்டிச்சேரி பட ஸ்டைலில் ஒரே பஸ்ஸில் நடக்கும் கதையை துணிச்சலாக கையில் எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரதிபாலா. இயல்பான மனிதர்கள் யதார்த்தமான உரையாடல்கள் என மதுரை டு தேனி ரூட்டை கவனமாக செதுக்கியிருப்பதில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர்.
தெனாவெட்டு வாத்தி கேரக்டரில் படுபாந்தமாக பொருந்துகிறார் அரவிந்த் வினோத். பெரும்பாலும் லுக் விடுகிற ஸீன்கள் என்பதால், பேசாமல் அடக்கியே வாசித்திருக்கிறார். அதற்காக ஸ்ரித்திகாவின் தாய் மாமன் கொலை வெறியோடு வந்து தகராறு பண்ணும்போதும் அமைதி சாமியாராக தவம் இருப்பதா? தேனி பக்கத்து பெண்ணின் நடை, உடை, பாவனைகளை அப்படியே அசலாக பிரதிபலிக்கிறார் ஸ்ரித்திகா. க்ளைமாக்ஸில் அலறி கதறிக் தனக்கு நடிக்க தெரியும் என்பதை நிரூபிக்கிறார்.
டீயை தட்டி விட்டதால் அம்மா கொடுத்த சாபம், நாள் முழுக்க டீ, சர்பத், குடிக்க முடியாமல் அலைபாயும் செல்வம், அடுத்த சூப்பர் ஸ்டார் கனவோடு பஸ் கண்டக்டராக அலப்பறை கொடுக்கும் ராஜ்குமாரும் படத்தின் காமெடி குத்தகைதாரர்கள், சிங்கமுத்துவும் குறை வைக்கவில்லை. ரொம்ப நல்லவனாக இருக்கான். ஒரு வேளை வெளியூர்காரனா இருப்பானோ? என்று குழம்பும் இடத்தில் சிரிக்க வைக்கிறார்.
முதல் பாதி முழுக்க பஸ்ஸுக்கு உள்ளேயே சுற்றிச்சுற்றி வரும் காட்சிகள் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துக்கின்றன. ஆனால், நக்கல், நையாண்டியோடு எழுதப்பட்டிருக்கும் சுருளிப்பட்டி சிவாஜி மற்றும் ரதிபாலாவின் வசனங்கள் அதை மறக்கடிக்க செய்கின்றன. கண் ஆபரேஷன் செய்த கையோடு விடாப்பிடியாக டி.வி. பார்க்கும் கிழவி. போர்வையை போர்த்தியபடி ஊர்க்காரர்களை வம்பு இழுக்கும் லந்து பார்ட்டி, பணம் கேட்டாலே எரிச்சல் ஆகிற ஸ்ரித்திகாவின் அப்பா, ஜிகுஜிகு சட்டையோடு தொடை தட்டி துள்ளி குதிக்கும் தாய் மாமன் எனப் படத்தில் பல கேரக்டர்களை சுவாரஸ்யம் கூட்டுக்கின்றன.
கண்களால் ஈர்த்து காதல் தூது விடும் ஸ்ரித்திகா, கல்யாணம் என்றதும் ஏன் பம்மி பதுங்குகிறார் என்பதற்கு காரணமே இல்லையே? ஸ்ரித்திகாவிடம் இருந்து பாஸிட்டிவ் பதில் வராதபோதும், துணிந்து பெண் கேட்டு செல்வதெல்லாம் சின்னபுள்ளைத்தனமாக இருக்கே.
அறிமுக இசையமைப்பாளர் ஜேவியின் பின்னணி இசை மட்டும் ஓ.கே. எஸ்.பி.எஸ். குகனின் டிஜிட்டல் ஒளிப்பதிவில் பல இடங்களில் வீடியோ வாசம்.
வெயில் கால பஸ் ட்ரிப் போல நகரும் காட்சிகள் தான் சோர்வை கொடுக்கின்றன. இல்லையென்றால் இந்த ட்ரிப் மறக்க முடியாத சுற்றுலா ஆகியிருக்கும்.
விகடன் மார்க் : 39/100
|
|
|
<< விமர்சனம் முதல் பக்கம்
சினிமா முதல் பக்கம்
|
|
 |
| |
|
|
|