Cinema Home
 
சினி தகவல்கள்
 

  சினிமா முதல் பக்கம்
 
      ஸ்பெஷல் ரிப்போர்ட்  


ராகுலுடன் விஜய் சந்திப்பு பின்னணி!
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலடன், நடிகர் விஜய் சந்தித்துப் பேசியது, தமிழக அரசியல் வட்டாரத்திலும், திரையுலகத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் விஜய் கடந்த ஜூன் 22ம் தேதி பிறந்த நாள் கொண்டாடும்போது, தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். ஏழை மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் மையங்களை திறந்துவைத்ததுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்நிலையில், விஜய் கடந்த 24ம் தேதி, டில்லியில் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், தனது அரசியல் ஆர்வம் குறித்தும் அப்போது விஜய் தெரிவித்துள்ளார்.திடீரென நிகழ்ந்துள்ள இந்தச் சந்திப்பு, பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இவரது அரசியல் ஆசையைத் தெரிந்துகொண்ட, தமிழக அரசியல் தலைவர்கள் சிலர், விஜய்க்கு ஆதரவுக்கரம் நீட்ட முயற்சித்துள்ளனர். ஆனால், விஜய் அதை விரும்பவில்லை.

ரசிகர் மன்றத்தின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். பிறகு அனைத்து மாவட்ட தலைவர்களையும் ஒட்டுமொத்தமாக இரண்டு முறை சென்னைக்கு அழைத்து, விஜய் வீட்டில் ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் நிலை, புதிதாக அரசியல் கட்சி துவங்கியவர்களின் நிலை, ஏதேனும் அரசியல் கட்சியில் சேரலாமா, தனிக்கட்சி துவங்கலாமா, நம் பலம் என்ன, பலவீனம் என்ன, பல அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மக்கள் இயக்கத்தில் உள்ளனர். அவர்களை முழுவதுமாக ஒருங்கிணைத்து எப்படி தங்களோடு அழைத்து வருவது, குறித்தும் விவரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியின் தற்போதைய நிலை குறித்தும் தனித்தனியே விவாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வில் இளைஞர் அணியின் நிலை, அ.தி.மு.க., இளைஞர் பாசறைகளின் நிலை, இளைஞர் காங்கிரஸ் நிலை குறித்தும் அந்தக் கட்சிகளில் சாதகமான நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. நடிகராக இருந்து கட்சி துவங்கிய விஜயகாந்த் கட்சியை வளர்க்க பெரும் போராட்டம் நடத்தி வருகிறார்.

சரத்குமார், டி.ராஜேந்தர் கட்சி நடத்தினாலும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற திணறி வருகின்றனர். மாநில கட்சிகளின் இந்நிலையால், தனிக் கட்சி துவங்குவதை விட பலமான தேசியக் கட்சியில் சேர்ந்துவிடலாம் என்றும், அதற்கான கால நேரத்தை முடிவு செய்ய வேண்டும் என்றும் பேசப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க., கூட்டணி வைத்திருப்பதால் மாநிலத்தில் எதிர்ப்பும் அவ்வளவாக இருக்காது என்றும் நிர்வாகிகள் மூலம் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு தமிழகத்தில் முக்கிய காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, அடுத்தகட்ட முடிவு எடுக்க விஜய்யும், அவரது அப்பா சந்திரசேகரும் முயற்சிக்க வேண்டும் என்றும் பேசப்பட்டுள்ளது.

முடிவில், மத்திய அமைச்சர் சிதம்பரம் மூலம் தனது நிலை குறித்து தெரிவிக்கவும், ராகுலை நேரில் சந்திக்கவும் கடந்த ஜூன் மாதத்திலிருந்து விஜய் முயற்சி மேற்கொண்டார். விஜய்யின், "பயோ டேட்டா' தயாரிக்கப்பட்டு, விஜய்க்கு எந்த மாதிரி நடவடிக்கைகளில் விருப்பம் உள்ளது; அடுத்து என்ன செய்ய உத்தேசம் என்பது குறித்து, விரிவாக, கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு திரையுலகில், தமிழகத்தில் ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பு குறித்தும் 30 நிமிட வீடியோ சி.டி.,யும் அனுப்பப்பட்டு, சந்திக்க நேரமும் கேட்கப்பட்டுள்ளது.

ராகுலிடம் இருந்து விஜய்க்கு அழைப்பு வர, டில்லியில் 24ம் தேதி சந்திப்பு நடந்தது. விஜய்யின் மக்கள் நல செயல்பாடுகள் குறித்து, ராகுல் பாராட்டியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து விஜய்யை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.""விஜய்க்கு 24ம் தேதி ராகுல் அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருந்தார். இருவரும் நீண்ட நேரம் பேசினர். என்ன பேசிக்கொண்டனர் என்பது குறித்து இப்போது சொல்வதற்கில்லை. மிகப் பெரிய அரசியல் கட்சியின் பொதுச் செயலரான ராகுலுடன் விஜய் தனியே சந்தித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

தமிழக காங்கிரஸ் தரப்பில் கேட்டபோது, "தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் மூலம் கட்சியை பலப்படுத்த ராகுல் தீவிரம் காட்டி வருகிறார். அவர் நடிகர் விஜய்யுடன் பேசியது, இதில் ஒரு முயற்சியாகவும் இருக்கலாம். விரைவில் நல்ல அறிவிப்பு வரும்' என்றனர். காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறுகையில், இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. நடிகர் விஜய் காங்கிரஸில் சேர்ந்தால் வரவேற்போம், என்றார்.

          << ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்                                                                 சினிமா முதல் பக்கம்
   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.