|
காதல் மீது நம்பிக்கை இல்லை : நடிகை பானு
|
|
|
|
கருப்பான கையாலே என்னைப் பிடிச்சான்.. பாடல் மூலம் அனைவரின் கண்களையும் தன்பக்கம் திருப்பியவர் தாமிரபரணி பானு. சம்பளம் அதிகம் கேட்கிறார், பெற்றோரிடம் தகராறு என பல்வேறு பரபரப்புகள் அவரை சுற்றி சுழன்றன. அவற்றையெல்லாம் காற்றில் பறந்து வந்த தூசு போல தட்டி விட்டு விட்டு அழகர் மலை மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார். அவரது பேட்டி:-
"பள்ளியில் படிக்கும்போதே நடிகையாகிவிட்டேன். சினிமாவைப் பற்றி அப்போது எனக்கு முழுவதும் தெரியாது. ஒரு நடிகைக்கு முதல் படமே ஹிட்டாவது மிகப்பெரிய அதிர்ஷ்டம். தாமிரபரணி யூனிட் மூலம் எனக்கு அது அமைந்தது. அந்தப்படத்தின் போதே ஒப்புக்கொண்ட மலையாளப் படங்களில் நடிக்க சென்றேன். இதனால், தமிழில் கொஞ்சம் இடைவெளி விழுந்துவிட்டது.
"குடும்பத்துக்குள் பிரச்னை வரக்கூடாது. அப்படி வந்தால், நிம்மதி போய்விடும். ஏதோ ஒரு காரணத்தால், எனக்கும் சிறு மனஸ்தாபம் வந்தது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது; ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். தமிழில் ஏன் நடிக்கவில்லை, வாய்ப்புகள் வரவில்லையா? எனக் கேட்கின்றனர். நிறைய வாய்ப்புகள் வந்தன. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாத கேரக்டர்கள் என்பதால், அவற்றை ஒப்புக் கொள்ளவில்லை. இதனால், நான் சம்பளம் அதிகம் கேட்பதாக கிசுகிசு கிளம்பி விட்டது.
"தன்னை உணர்ந்தவன், அனைவருக்கும் பரிட்சயமானவனாய் ஆகிறான் என்பார்கள். என்னைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். எனக்கு ஹோம்லியான கேரக்டர்கள்தான் கச்சிதமாக இருக்கும். கிளாமராக நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. அவற்றை தவிர்த்து விட்டேன். உயரம் குறைவாக இருப்பதை நினைத்து நான் வருத்தப்படவில்லை. நான் குட்டையாக இருப்பதாக விமர்சிக்கின்றனர். விஷாலுடன் என்னைப் பார்த்ததால்தான் அப்படித் தெரிகிறது என நினைக்கிறேன்.
"இதுபோன்ற விமர்சனங்கள் எனக்குப் பழகிவிட்டது. எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு நிச்சயம் கிடைத்தே தீரும். ராஜ்குமார் டைரக்ஷனில் ஆர்.கே.,வுடன் நான் நடித்த, அழகர் மலை படம், நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்போது புதிய வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. எனக்கு பொருத்தமான கேரக்டர் இருக்கும் படத்தில் நடிப்பேன்.
இவ்வாறு பானு கூறினார்.
நடிகையிடம் பேட்டியெடுக்க சென்றால் காதலைப் பற்றிக் கேட்காவிட்டால், வாசகர்கள் கோவிச்சுக்குவாங்க. அதனால...' என, கேள்வியை முடிக்கும் முன்னரே, பதிலை தட்டிவிட்டார் பானு! "என்னிடம் நிறைய பேர் தங்களது காதலை வெளிப்படுத்தினர். அது காதலா அல்லது ஈர்ப்பா என்பதை கூட அவர்கள் உணரவில்லை. காதல் என்பது, ஒருமுறைதான் வரவேண்டும். பக்குவப்பட்ட வயதில் வருவதுதான் உண்மையான காதல். அதனால், இன்றைய நிலவரப்படி, காதல் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, என்கிறார் பானு!! விவரமான பொண்ணுதான்!!!
|
|
|