Cinema Home
 
சினி தகவல்கள்
 

  சினிமா முதல் பக்கம்
 
      ஸ்பெஷல் ரிப்போர்ட்  


நான் பிறவி நடிகன் கிடையாது : சுந்தர்.சி.
கோடம்பாக்கத்தின் மினிமம் கியாரன்டி கதாநாயகன் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் சுந்தர்.சி. 25 படங்களை இயக்கிய இவர், "தலைநகரம்' மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். இவர் நடித்துள்ள "ஐந்தாம்படை', ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இதுகுறித்து சுந்தர்.சியிடம் பேசியபோது...

"டைரக்டர் பத்ரி, எனது உதவியாளராக இருந்தவர். இவரது இயக்கத்தில் நான் நடித்த "வீராப்பு'க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இரண்டாவது முறையாக தற்போது அவருடன் நான் இணைகிறேன். ஐந்து சகோதரர்களுக்குள் நிகழும் சம்பவங்கள்தான் கதை. இதில் எனது சகோதர்களில் ஒருவராக விவேக் வருகிறார். எங்கள் குடும்பத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் நபராக சிம்ரன் வருகிறார். தேவயானியும் மிகச் சிறப்பாக செய்துள்ளார். கதாநாயகியாக அதிதி நடித்துள்ளார்.

"எனது உதவியாளர் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாக என் மீது குற்றச்சாட்டு உள்ளது. உண்மையை சொல்லப் போனால், நான் பிறவி நடிகன் கிடையாது. எனக்கு என்ன வரும், என்ன செய்ய முடியும் என்பதை அருகில் இருந்து உதவியாளர்கள் பார்த்துள்ளனர். அதற்கேற்ப எனது பாத்திரத்தை வடிவமைக்கின்றனர். எனது சக்திக்கு மீறிய காட்சிகள் இருந்தால், அதில் கொஞ்சம் மாற்றம் செய்யச் சொல்லி உரிமையோடு கேட்கலாம்.

"இதுபோன்ற சவுகரியங்கள் இருப்பதால்தான், எனது உதவி டைரக்டர்களின் படங்களில் அதிகம் நடித்துள்ளேன். மற்ற டைரக்டர்கள் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை. சேரன் படம் என்றால், கொஞ்சம் அறிவுரை இருக்கும் என எதிர்பார்த்தே ஆடியன்ஸ் உள்ளே வருகின்றனர். அது இல்லாமல் போனால்தான் அவர்களுக்கு ஏமாற்றம்.

"கெட்டப்பை மாற்றி, வித்தியாசமான வேடங்களில் நடிக்கலாம் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. காந்திய கொள்கைகளை வலியுறுத்தும் "ஆயுதம் செய்வோம்' அட்டகாசமான கதைதான். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் வெற்றி பெறவில்லை.

"எனக்கும் வடிவேலுவுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. இடையில் இருந்தவர்கள் சிலர், எங்களுக்குள் மூட்டி விடப் பார்த்தார்கள். அதனால் எங்களுக்குள் ஏற்பட்ட நெருக்கத்தில் இடைவெளி விழுந்தது. இப்போது அவை சரி செய்யப்பட்டு விட்டன. கதாநாயகனாக, எனது முதல் படமான "தலைநகரம்' வெற்றிக்கு வடிவேலுவும் ஒரு முக்கிய காரணம். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். "குரு சிஷ்யன்' படத்தில் அவருடன் மீண்டும் இணைகிறேன்''.

"இனிடைரக்டர் சுந்தர்.சி.,யை பார்க்க முடியாதா' எனக் கேட்டால், "டைரக்ஷன் என்பது நான் தவமிருந்து பெற்ற முதல் குழந்தை. நடிப்பு என்பது இப்போது பிறந்துள்ள குழந்தை. என் முதல் குழந்தையின் மீதான அன்பு, இன்னும் அப்படியே தான் இருக்கிறது'' என்கிறார்  இரு குழந்தைகளின் தந்தை சுந்தர் சி.!!

-தினமலர் சினி டீம் -

          << ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்                                                                 சினிமா முதல் பக்கம்
   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.