|
தேர்தல் பிரசாரத்தில் களமிறங்குவாரா விஜய்?
|
|
|
|
நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் விஜய்யை தேர்தல் பிரசாரம் செய்ய வைக்க தி.மு.க., தரப்பில் பகீரத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக சினிமாத்துறையில் தற்போதுள்ள இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்க இளம் ரசிகர்களையும், இளம் ரசிகைகளையும் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடைய தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் எப்போதும் தி.மு.க., ஆதரவாளராகவே தன்னை அடையாளம் காட்டி வருபவர். அதேபோல், தன்னுடைய மகனையும் தி.மு.க., அனுதாபியாகத் தான் வெளிப்படுத்தி வருகிறார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தி.மு.க.,வின் முயற்சியால் பிரதமர் மன்மோகன் சிங் கையால் வெளியிடப்பட்ட தபால்தலையைப் பெற்றுக் கொள்ளும் அரிய வாய்ப்பை விஜய் பெற்றார். இது, தி.மு.க., மேல் நடிகர் விஜய் குடும்பத்தாருக்குப் பெரும் மதிப்பு ஏற்படுத்த முக்கிய காரணமாக அமைந்தது.
'ஓராண்டுக்கு மேலாக நடிகர் விஜய் தனிக்கட்சி துவங்கவுள்ளார்' என்று பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து பல்வேறு விதமாக செய்திகள் உலா வந்தன. ஆனால், 'கட்சி ஏதும் துவங்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை' என, விஜய் கூறி வருகிறார். தி.மு.க.,வுடன் உள்ள நெருக்கம் காரணமாகத் தான் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி தயாரிப்பில், 'குருவி' படத்தில் விஜய் நடித்தார். இப்படி எப்போதும் தி.மு.க.,வுக்குச் சாதகமாக இருந்துவரும் நடிகர் விஜய்யை, வரும் லோக்சபா தேர்தலில் பிரசாரத்துக்குப் பயன்படுத்த தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. 'தேர்தல் பிரசாரம் செய்ய சம்மதமா?' என்று கேட்டு மூன்று நாட்களுக்கு முன் தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகள் இருவர் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில், அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால், விஜய்யோ அவர்களிடம் எந்தப் பிடியும் கொடுக்காமல், பட்டும்படாமல் பேசியுள்ளார். 'மீண்டும் பேசுவோம்' என்று, தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகள் திரும்பிவிட்டனர்.
தமிழகத்தில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் நடிகர் விஜய்யை தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் எப்படியாவது ஈடுபடு வைக்க வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க., பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், நடிப்புத்தொழிலில் இருக்கும் விஜய், யாரையும் பகைத்துக் கொள்ளவேண்டாம் என்ற எண்ணத்தில் உள்ளார். தி.மு.க., கூட்டணிக்குப் பிரசாரம் செய்ய அவர் தயாரில்லை என்ற அவரது கருத்தை, தி.மு.க., தலைமைக்கு எப்படி தெரியப்படுத்துவது எனத் தெரியாமல் விஜய் தவியாய் தவித்து வருகிறார். அதேநேரம், 'நடிகர் விஜய்யை எப்படியாவது அரசியலுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும்' என்று, அவரது தந்தை சந்திரசேகர் முயற்சிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தேர்தல் பிரசாரம் செய்ய தி.மு.க., தரப்பில் விஜய்யை அணுகியது குறித்து அவரது தந்தை சந்திரசேகரிடம் கேட்டபோது, ''பிரசாரம் செய்வது தொடர்பாக யாரும் விஜய்யை வந்து பார்த்தனரா என்று எனக்கு ஏதும் தெரியாது,'' என்றார்.
விஜய் தேர்தல் பிரசாரத்தில் களமிறங்குவாரா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
|
|
|