Cinema Home
 
சினி தகவல்கள்
 

  சினிமா முதல் பக்கம்
 
      ஸ்பெஷல் ரிப்போர்ட்  


ஜெய்க்கு தடா! வதந்தி பின்னணி என்ன?
கோடம்பாக்கத்தை உலா வரும் வதந்திகளில் லேட்டஸ்ட் வதந்தி சென்னை28, சுப்பிரமணியபுரம் படங்களின் நாயகன் ஜெய்க்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் ரெட் போட்டுள்ளது என்பதுதான்.

இதுபற்றி விசாரித்ததில் தடை போடப்படவில்லை... ஆனால், தற்போது ஜெய் நடித்து வரும் வாமணன், அதே நேரம் அதே இடம், அர்ஜூனன் காதலி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர்களிடம் கெட்ட பெயர் வாங்கியிருக்கும் ஜெய்க்கு தயாரிப்பாளர் சங்கத்தால் எச்சரிக்கை மட்டும் செய்யப்பட்டது எனும் தகவல் கிடைத்தது. அதுவும் தயாரிப்பாளர்களின் இசையமைப்பாளராக இன்று வரை புகழோடு விளங்கும் இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சம்பத்தின் மகன் எனும் ஒரே காரணத்தால் இந்தமுறை ஜெய்க்கு தடை ‌போ‌ட வில்லையாம். தன் தவறுகளை ஜெய் திருத்திக் கொள்ளவில்லையெனில் அடுத்த முறை கடுமையான விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதோடு இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அப்படி என்னென்ன குற்றச்சாட்டுகள்தான் ஜெய் மீது சொல்லப்படுகிறது. அவர் என்ன தவறு செய்தார்?

குற்றச்சாட்டு நம்பர் 1

தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் தன் பெரியப்பா தேவாவின் இசையில் அவரது மருமகன் பார்த்தி பாஸ்கர் இயக்கும் அர்ஜூனன் காதலி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் குற்றாலத்தில் நடந்தது. அப்பொழுது ஒரு மழை குளியல் காட்சியில் டேங்கர் லாரியில் தண்ணீர் வரவழைக்கப்பட்டு நனைந்திருக்கிறார் ஜெய். ரீ-டேக்... ரீ-டேக் என ஐந்தாறு முறை அதே காட்சி படம் பிடிக்கப்பட, லாரி தண்ணீர் தீர்ந்து விட்டதாம். அதன் பின்னர் உடனடியாக குற்றாலம் அருவியில் இருந்து பைப் லைன் போட்டு அதே மழை ஷாட் ஷூட் செய்யப்பட, தண்ணீர் வேறு டேஸ்ட்டில் இருப்பதை கண்ட ஜெய், என்ன ஏதென்று காரணம் கேட்டு நடிக்க மறுத்திருக்கிறார். அதுவும் எப்படி? என்னை நம்பி ஐந்தாறு பேர் இருக்கிறாங்க (இவரை வைத்து படம் பண்ணும் தயாரிப்பாளர்கள்). அவங்களை நம்பி நூறு பேர் இருக்கிறாங்க... என்றும் நாளைக்கு ஜலதோஷம், காய்ச்சல் என்றால் யார் பதில் சொல்வது, நோ... நோ... என மறுத்து மீண்டும் டேங்கர் லாரி தண்ணீர் கொண்டு வந்த பிறகே அந்த மழை குளியல் காட்சியில் நடித்தாராம். இத்தனைக்கும் குற்றாலம் அருவி தண்ணீர் மூலிகை கலந்த தண்ணீர் என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் மறுத்து விட்டாராம். இதனால் மூன்று மணி நேரம் சூட்டிங் தாமதம் ஆனது.

குற்றச்சாட்டு நம்பர் 2

அதே நேரம் அதே இடம் படத்திற்கு தனது காஸ்ட்யூம் எல்லாம் சென்னையின் காஸ்ட்லி ஷாப்பிங் சென்டரான குளோபல்ஸில்தான் வாங்க வேண்டும் என்று அடம் பிடித்த ஜெய், அதே படத்திற்கு தனக்கும், தனக்கு ‌ஜோடியாக நடிக்கும் விஜயலட்சுமிக்கும் கேரவன் வேண்டுமென்று கேட்டு அடம் பிடித்து, அதை சாதித்தது உள்பட இன்னும் பல டார்ச்சர்கள்.

குற்றச்சாட்டு நம்பர் 3

வாமணன் படப்பிடிப்பு மொத்தமும் இவர் உணவு, உடை என இப்படி இல்லை... அப்படி இல்லை.. ஜெய் செய்த டார்ச்சர் தாங்காமல் சூட்டிங்கின் கடைசி 3 நாட்கள் மொ‌த்த யூனிட்டும் ஜெய்யிடம் பேசாமல் மவுன விரதம் இருந்து வெறுப்பேற்றிய சம்பவமும் நடந்துள்ளது. அது மட்டுமல்ல... இதே படப்பிடிப்பில் கடைசி இரண்டு நாள் சூட்டிங்கில் எடுக்கப்பட்ட ஒரு பாடல் காட்சியில் ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டும் ஜெய்யை பயன்படுத்தி வெறுப்பேற்றியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் ஜெய்யின் ஓவர் பந்தா தானாம்.

குற்றச்சாட்டு நம்பர் 4

ரெட் புல் எனும் ஒரு விதமான காஸ்ட்லி எனர்ஜி ட்ரிங் டின்தான் ஜெய்யின் உற்சாகத்திற்கும், ஊக்கத்திற்கும் காரணமாம். அதனால் தினமும் ஒன்று, இரண்டு, மூன்று கேஸ் ரெட்புல் வாங்கி தந்தால்தான் ஷாட்டிற்கே வரும் வழக்கமுடைய ஜெய் மீது ஒட்டு மொத்த கோடம்பாக்கமே வெறுப்பில்தான் இருக்கிறது.

குற்றச்சாட்டு நம்பர் 5

தேவாவின் தம்பி சம்பத்தின் மகன் என்றாலும், பிரபல ஹீரோ ஆன பின் தேனிசைத் தென்றலை மரியாதம் நிமித்தம் ஒருமுறை கூட போய் பார்க்கவில்லையாம் ஜெய். அதன் விளைவு, தேவாவிற்காக தயாரிப்பாளர் சங்கம் ஜெய்யை மன்னிக்க... தேவாவோ... எனக்காக ஏன் அவனை விட்டீர்கள்... தவறு செய்தவனுக்கு தண்‌டனை தர வேண்டியதுதானே... என்று கூறியிருக்கிறார்.

- தினமலர் சினி டீம் -

          << ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்                                                                 சினிமா முதல் பக்கம்
   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.