|
பிரபுதேவாவுக்கு மனைவி வீசிய வலை : பாலிவுட்டில் பரபரப்பு
|
|
|
|
பிரவுதேவாவுடன் பேச முயன்று அவரது மனைவி வீசிய வலை பாலிவுட்டில் கசிந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் இருக்கும் பிரபுதேவா, சென்னையில் உள்ள வீட்டாருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். உறவினர் மூலம் பேசுவதற்கு முயன்ற போதும், பிரபுதேவா மறுத்து விட்டதால், மனைவி ரமலத் வருத்தத்தில் உள்ளார்.
டான்ஸ் மாஸ்டராக பிரபுதேவா இருந்தபோது, நடனக் குழுவில் ஆடிக் கொண்டிருந்த ரமலத்தை காதலித்தார். இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தும், அதையும் மீறி 1995ல் திருமணம் செய்து, வீட்டை விட்டு வெளியேறி, சென்னை அண்ணா நகரில் குடியேறினார். இப்படி காதலித்த பெண்ணுக்காக குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை விட்டு விலகிய பிரபுதேவா, திடீரென நடிகை நயன்தாராவின் காதல் வலையில் வீழ்ந்ததால், இவரின் நடவடிக்கைகள் தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்படும் நிலைக்கு வந்துவிட்டது. விஜய் - நயன்தாரா நடித்த, "வில்லு' படத்தை பிரபுதேவா இயக்கியபோது, நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும், "நட்பு' ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்தபோது, இருவருக்கும், "நெருக்கம்' அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தை, நடனக் குழுவில் இருந்த ஒருவர், பிரபுதேவாவின் மனைவி ரமலத்திடம், "போட்டு' கொடுத்து விட்டார். "நயன்தாரா ஒரு நடிகை; என் கணவர் இயக்குனர். அருகிலிருந்து பேசுவதில் தவறில்லை. எத்தனையோ எதிர்ப்புகளை மீறி எந்த எதிர்பார்ப்பும் இன்றி என்னை திருமணம் செய்து கொண்டார். அப்படிபட்டவர், நிச்சயம் எனக்கு பாதகமாக நடக்க மாட்டார்' என்று, தகவல் சொன்னவரிடம் பேசி அனுப்பியுள்ளார் ரமலத். ஆனால், நாளாக நாளாக நிலைமை விபரீதமாவதை அவரே புரிந்து கொண்டார்.
"வில்லு' படத்தில் நயன்தாராவுடன் பழகி, அது காதலாக மாறியதும், சென்னையை விட ஐதராபாத்திலும், மும்பையிலும் மட்டுமே பிரபுதேவா அதிக நாட்கள் தங்கியிருந்துள்ளார். இருவரும் ஒரு நாள் திடீரென்று துபாய் சென்றது, சென்னையிலிருந்த ரமலத்துக்கு தெரிய வர, பிரபுதேவாவிடம் கோபப்பட்டுள்ளார். "இனிமேல் இருவரும் ஒன்றாக எங்கும் செல்ல வேண்டாம். பத்திரிகைகளில் உங்களைப் பற்றி வரும் செய்திகள் என்னை சங்கடப்படுத்துகின்றன; பார்த்து நடந்து கொள்ளுங்கள்' என்றும் கூறியுள்ளார்.
நயன்தாராவுடன் பேசி, "இனிமேல் பிரபுவுடன் பொது இடங்களுக்கு சேர்ந்து செல்ல வேண்டாம்' என்றும் கூறியுள்ளார். இதன் பிறகு, "வான்டட்' படத்தின் ஷூட்டிங்கை காரணம் காட்டி பிரபுதேவா, சென்னை வருவதை குறைத்துக் கொண்டிருக்கிறார். நயன்தாரா கையில் பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தியிருப்பது குறித்து பத்திரிகைகளில் செய்தி பார்த்த ரமலத், இது குறித்து பிரபுதேவாவிடம் கேட்டபோதும், பிரபுதேவா மவுனமாக இருந்துள்ளார். இந்நிலையில், மும்பையில் பிரபுதேவாவும், நயன்தாராவும், "வான்டட்' படத்தை ஒன்றாக பார்த்துவிட்டு வெளியில் வரும் போது நிருபர்கள் சூழ்ந்து கொண்டு, "இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா?' என்று கேட்டனர்.
பிரபுதேவா, "நோ கமென்ட்ஸ்' சொல்லிவிட்டு வெளியேறினார். ரமலத் உடனடியாக பிரபுதேவாவை தொடர்பு கொண்டு பேச முயன்றபோது, அவரது மொபைல் போன், "சுவிட்ச் ஆப்'பில் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த ரமலத், நயன்தாராவுடன் பேச முயன்றிருக்கிறார். அவரது மொபைல் போனும், "சுவிட்ச் ஆப்'பில் இருந்துள்ளது. இந்திப் பட யூனிட்டை சேர்ந்த சிலருக்கு போன் செய்து, "பிரபுதேவாவை வீட்டுக்கு வரச் சொல்லுங்கள்' என்று தகவல் சொல்லியும், பிரபுதேவா இன்னும் சென்னை வரவில்லை.
ரமலத்திடம் இது குறித்து பேச முயன்றபோது, பேச மறுத்துவிட்டார். பிரபுதேவா குடும்பத்திற்கு வேண்டப்பட்டவர்கள், "பத்திரிகைகளுக்கு ஏதும் பேட்டி கொடுக்க வேண்டாம்; பிரபுவிடம் நாங்கள் பேசி சரி செய்கிறோம்' என சொல்லியுள்ளனராம். பிரச்னை குறித்து நயன்தாராவை தொடர்பு கொண்ட போது, "எனக்கும் பிரபுதேவாவுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை, பிரபுதேவாவிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்' எனக் கூறினார்.
பிரபுதேவாவுடன் பேச முயன்று அவரது மனைவி வீசிய வலை பாலிவுட்டில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபுதேவாவும் குடும்பத்தாருடன் பேசுவதை அறவே தவிர்த்து விட்டதாகவே தெரிகிறது. நயன்தாராவுடன் காதல் சர்ச்சை உச்சகட்டம் கோலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஹாட் டாக்காக இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- தினமலர் சினி டீம் -
|
|
|