|
வருகிற தை மாதம் 1ம்தேதி தமிழ் புத்தாண்டு தினம் உலக தரத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் முதல்வர் கருணாநிதியை, சங்கத்தின் பொதுச்செயலாளர் டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, துணைத்தலைவர் விக்ரமன், இணைச்செயலாளர்கள் என்.லிங்குசாமி, அமீர், டி.கே.சண்முகசுந்தரம், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஈ.ராம்தாஸ், எழில், மாதேஷ், பேரரசு, இணை இயக்குனர்கள் ஆர்.சிபி, ராஜா கார்த்திக் ஆகியோர் சந்தித்தார்கள்.
அப்போது, வருகிற ஜூன் மாதம் கோவையில் நடைபெற உள்ள உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் பங்குபெறவும், தமிழ் மொழியின் தொன்மையையும், சிறப்பையும் விளக்கும் விதமாக இயக்குனர்கள் பங்குபெறும் வரலாற்று நாடகங்களை நடத்தவும் அனுமதிக்குமாறு நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்கள். ஆங்கில புத்தாண்டு மற்றும் சீனப்புத்தாண்டு போல், தமிழ் புத்தாண்டு மிக சிறப்பாக, கோலாகலமாக கொண்டாடப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் வருகிற 2010 தமிழ் புத்தாண்டில், சென்னை மெரினா கடற்கரையில் உலக தரத்துடன் வானவேடிக்கைகள் நடத்துவதற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதில், முதல்வர் கருணாநிதி பங்கேற்க வேண்டும் என்றும் டைரக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
|
| |
|
|