|
|
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தனது நடிப்புலக அனுபவம், திரையுலக சவால்களை சமாளிக்கும் திறமை குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியது : திரையுலகம் சற்று முரட்டுத்தனமானது, கரடு முரடானது. இதை சமாளிக்க தனி தைரியம், திறமை நிச்சயம் வேண்டும். இங்கு ஏமாற்றுக்காரர்கள் அதிகம். அவர்களிடம் சிக்காமல் தப்புவதே ஒரு கலையாகும். ஆனால் இதெல்லாம் புதிதாக சினிமாவுக்கு வருபவர்களுக்குத் தான். நான் பதினேழு வயதிலேயே நடிக்க வந்து விட்டேன். சினிமாவின் சகலமும் எனக்கு அத்துப்படி. எதை எப்படி கையாள வேண்டும் என்ற தந்திரம் எனக்குத் தெரியும். சினிமாவிலேயே வளர்ந்தேன், இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன். 12வது படித்தபோது சினிமாவுக்கு வந்தேன். ஆகவே எனது வாழ்க்கையின் பெரும் பகுதி சினிமாவில்தான் கழிந்துள்ளது. எனக்கு சினிமாவை விட்டால் வேறு எதுவுமே தெரியாது. இதைத் தவிர வேறு என்ன வேலை தெரியும் என்றால் நிச்சயம் என்னிடம் பதில் இல்லை என்கிறார் பிரியங்கா. பெரிதாக பேசப்பட்ட வாட்ஸ் யுவர் ராசி படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளதே என்று கேட்டால், அது தலை விதி. யாரால் அதை மாற்ற முடியும். தொடர்ந்து நான்கு வெற்றிப்படங்களை கொடுத்தேன். ஆனால் அடுத்து வந்த ராசி சரியாகப் போகவில்லை. ஆனால் எனது நடிப்பையும், முயற்சியையும் நிறையப் பேர் பாராட்டினார்கள். இதுபோன்ற வித்தியாசமான படங்களில் நடிக்குமாறும் ஊக்கப்படுத்துகிறார்கள். இந்தப் படத்தில் நான் 12 ரோல்களில் நடித்ததை கின்னஸ் சாதனைக்காக அனுப்பியுள்ளனர். சாதனை என்று அங்கீகரிக்கப்பட்டால் எனக்கு சந்தோஷம்தான் என்கிறார்.
|
| |
|
|